/indian-express-tamil/media/media_files/2025/05/19/0dwyQeO9qPD4gu16q2EA.jpeg)
Cuddalore
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இக்கோயிலுக்குச் சொந்தமாக எட்டு ஏக்கர் நிலம் இருந்தது.
வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இந்த நிலத்தைச் சுற்றி கடந்த 60 ஆண்டுகளாக 250க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு, பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் வெளியூர் நகராட்சிக்கும், இந்து அறநிலையத்துறைக்கும் எவ்வித வரியும் செலுத்தவில்லை.
இதற்கிடையில், 1927 ஆம் ஆண்டு சபாபதி நைனார் என்பவர் இக்கோயிலில் ஆறு கால பூஜை நடைபெறுவதற்காக தனது சொந்த நிலமான 45 ஏக்கரை தானமாக வழங்கினார். இந்த நிலத்தைப் பராமரிக்க ஆலய நைனார் என்பவரை நியமித்து, அதற்கான உயில் ஒன்றை 1927 டிசம்பர் 12 ஆம் தேதி எழுதி பாலைய நைனாரிடம் ஒப்படைத்தார். ஆனால், பாலைய நைனார் 2012 ஆம் ஆண்டு இந்த நிலத்தில் சில பகுதிகளை மனைப்பிரிவுகளாக விற்றுவிட்டார். இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கும், இந்து அறநிலையத்துறைக்கும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும், நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் பகுதியில் உள்ள நான்கு ஏக்கர் 27 சென்ட் நிலத்தை தற்போது தக்ஷிணாமூர்த்தி வகையறாவினர் விவசாயம் செய்து வருகின்றனர். கோயிலைச் சுற்றியுள்ள எட்டு ஏக்கர் நிலத்தில் தற்போது 285 வீடுகள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டன. ஆனால், இவர்கள் யாரும் வரி செலுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோயிலுக்கு அருகாமையில் கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமான காலியிடங்கள் உள்ளன. கோயில் திருவிழாக் காலங்களில் பக்தர்கள் அமர்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் இந்த இடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கோயிலின் நுழைவு வாயில் முன்பிருந்த காலி இடத்தில் கீற்று கொட்டகை அமைத்து வசித்து வந்தார். பின்னர், அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி நிரந்தரமாக வசிக்கத் தொடங்கினார்.
சமீபத்தில், அந்த பெண் ஆக்கிரமிப்பு செய்த கோயில் இடத்தை பணம் வாங்கிக்கொண்டு தனது உறவினர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மேலும், கோயில் இடத்தை அபகரிப்பு செய்தவரின் பாட்டியின் பழைய வீட்டை இடித்துவிட்டு, அந்த இடத்தில் சிமெண்ட் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார்.
இதையறிந்த கோயில் நிர்வாகிகள், "இது கோயிலுக்குச் சொந்தமான இடம். ஆதரவற்ற மூதாட்டி என்பதால் அவர் வசித்து வர அனுமதிக்கப்பட்டார். தற்போது கோயிலுக்குச் சொந்தமான இடத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது" என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இருப்பினும், மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கோயில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிர்வாக அலுவலர் தேவகி, கோயில் பூசாரி பாக்கியராஜ், முன்னாள் கவுன்சிலர் தமிழ்மாறன் மற்றும் கோயில் நிர்வாகிகள் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வந்த நெல்லிக்குப்பம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்து அறநிலையத்துறை சர்வேயர் மூலம் கோயிலுக்குச் சொந்தமான இடங்களை அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.