கோயில்களில் ஸ்தபதி பணியிடங்களுக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..
தமிழகத்தின் புராதன சிற்பக்கலை உள்ளிட்ட கலைகளை பாதுகாக்க, கடந்த 1957ம் ஆண்டு மாமல்லபுரத்தில் அரசு சிற்பக்கலை கல்லூரி துவங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழக இணைப்பு பெற்ற இக்கல்லூரியில், கோவில் கட்டிடக் கலை, ஆகம சாஸ்திரம் உள்பட 58 பாடங்கள் நடத்தப்படுகின்றன.
இக்கல்லூரியில், பாரம்பரிய கட்டிடக் கலை படிப்பில் பி.டெக் பட்டம், கவின் கலை பட்டங்கள் படித்து, ஆண்டுதோறும் 40 மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே செல்கின்றனர். இதுவரை 1800 மாணவர்கள் இக்கல்லூரியில் படித்து முடித்துள்ளனர்.
இக்கல்லூரியில் படித்தவர்களை, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 38 ஆயிரத்து 600 கோவில்களில், பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஸ்தபதிகளாகவும், உதவிப் பொறியாளர்களாகவும் நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, இக்கல்லூரியில் பட்டம் பெற்ற முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். விசாரணையின் போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாமல்லபுரம் சிற்பகலை கல்லூரியின் முதல்வர் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று ஸ்தபதி, பொறியாளர் உள்ளிட்ட பதவிகளை உருவாக்க இருப்பதாகவும், அதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பு பணிகள் விதிகளை வகுக்க இருப்பதாகவும், கோவில்களை புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பிற்காக தனி பிரிவை துவக்கி, 2019ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்த நீதிபதி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பு பணிகள் விதிகளை 3 மாதங்களுக்குள் இறுதிசெய்ய வேண்டும் என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும், கோவில்களில் காலியாக உள்ள ஸ்தபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
புதிதாக உருவாக்கபட உள்ள இந்து அறநிலையத் துறையின் புதுப்பித்தல் மற்றும் பாதுக்காப்பு துறையில் ஸ்தபதி, பொறியாளர் பதவிக்கு சிற்பகலை கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
கோவில்களில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழமையான சிற்பங்கள், ஓவியங்கள், சிலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அத்துடன், கோவில்களில் காலியாக உள்ள ஸ்தபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.