Ten-inch very small footpath in Sardar Patel road: சென்னையில் பரபரப்பான வாகன போக்குவரத்து உள்ள சர்தார் பட்டேல் சாலையில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அருகே 10 அங்குலம் மட்டுமே உள்ள நடைபாதையில் நடப்பதற்கு பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சென்னையில் பரபரப்பாக வாகன போக்குவரத்து காணப்படும் சாலைகளில் சர்தார் பட்டேல் சாலையும் ஒன்று. இந்த சாலையில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அருகே பல ஆண்டுகளாக நடப்பதற்கு போதிய அளவு நடைபாதை இல்லாமல் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இருப்பதால் மிகவும் குறுகலாக 10 அங்குலம் மட்டுமே உள்ள நடைபாதையில் நடந்துசெல்பவர்கள் மிகவும் கவனமாக நடந்து செல்ல வேண்டும். கொஞ்சம் இடறினாலும் பின்னால் வரும் வாகனங்கள் உரச வாய்ப்புள்ளது. அதனால், சுவரைப் பிடித்துக்கொண்டே நடக்க வேண்டும் என்று அப்பகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த குறுகலான நடைபாதையில் தொடர்ந்து நடந்து செல்வது சிரமம் என்பதால் பாதசாரிகள் சாலைகளில் இறங்கி நடந்து செல்கிறார்கள். அப்போது வாகனங்களில் வருபவர்களும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
இந்திய சாலைகள் பேராயம் கூற்றுப்படி, வணிக பகுதிகளில் அமைந்துள்ள பாதையின் மொத்த அகலம் குறைந்தபட்சம் 3.3 மீட்டர் (தோராயமாக 10.8 அடி) முதல் 6.5 மீட்டர் (21.3 அடி) வரை இருக்க வேண்டும். இதில் மாறுபாடுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் இந்த சாலையின் அகலம் ஒரு அடி நடைபாதை போக மீதம் ஒன்பது அடி அகலமாக குறைந்து காணப்படுகிறது.
இந்த சாலை வேறு ஏதேனும் இடத்தில் இருந்திருந்தால் பிரச்னை இருக்காது. ஆனால், இது மிகவும் நெரிசலான சாலையாகும். அதனால் பாதசாரிகள் செல்வதற்கு பாதுகாப்பான நடைபாதை தேவை என்று அப்பகுதி பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அந்த பகுதியில் கல்வி நிறுவனங்கள் இருப்பதால் பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல நாடைபாதையை அகலப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பாதசாரிகள் கோரியுள்ளனர்.
இதே போல, வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு எதிரே வடிகால் கால்வாய் பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளம் தோண்டப்பட்ட பின்னர் அங்கிருந்த நடைபாதை காணாமல் போனது. இதனால், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அப்பகுதியில் வழக்கமாக நடந்து செல்லும் பாதசாரி ஒருவர் கூறுகையில், இந்த இடத்தில் முன்பு நடைபாதை பெரிய அளவில் இல்லை என்றாலும் நடப்பதற்காக ஏதோ நடைபாதை என்ற ஒன்று இருந்தது. வடிகால் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்டு மூடப்பட்டுவிட்டது. ஆனால், இன்னும் நடைபாதை சீரமைக்கப்படவில்லை” என்று கூறினார்.
இதனால், பாதசாரிகள் சிரமமில்லாமல் நடந்து செல்ல இந்த பகுதியில் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.