டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் எப்படி வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த மனுவை தனி நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் வாதிட்டார். மேலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராகி இருக்கிறார். வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், வருமான வரித்துறைக்காக ஆஜராகக் கூடிய மூத்த வழக்கறிஞர் ராஜூ எப்படி எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக ஆஜராகலாம் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கோரிக்கையை முன்வைத்தார்.
இதையடுத்து, வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விளக்கிய தமிழக அரசினுடைய தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, தன்னுடைய சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு ஆதரவாக ஒப்பந்தங்களை வழங்கிய வேலுமணி, அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.
மேலும், மத்திய அரசின் அனுமதி பெற்றுதான் இந்த வழக்கில் ஆஜராவதாக மூத்த வழக்கறிஞர் ராஜூ தெரிவித்தார். அதே போல, அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த பொது நல வழக்குடன் ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த குற்றவியல் வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது என்பதால், வழக்கை இரு நீதிபதிகள் விசாரிப்பதில் எந்த தவறும் இல்லை என்று என்று எஸ்.பி. வேலுமணி தரப்பில் வாதிடப்பட்டது. அதோடு, எந்த ஆதாரமும் இல்லை என்ற ஆரம்ப கட்ட விசாரணையைப் புறக்கணித்துவிட்டு, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.பி. வேலுமணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நாளை மறுநாள் (செப்டம்பர் 7) உத்தரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"