/indian-express-tamil/media/media_files/2025/07/03/vaiko-assi-arrest-2025-07-03-07-39-43.jpg)
இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை கருத்து… வைகோவின் முன்னாள் உதவியாளர் கைது
சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசார கருத்துகளைப் பதிவிட்டு வந்த சமூக ஆர்வலரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் முதன்மை உதவியாளருமான அருணகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அருணகிரி 60. இவரது தந்தை பழனிச்சாமி சங்கரன்கோவில் நகராட்சி முன்னாள் தலைவர். அருணகிரி நீண்ட காலமாக வைகோவின் முதன்மை உதவியாளராக இருந்தார். தற்போது அந்த பொறுப்பில் இல்லை.
வைகோவின் பேச்சுகளைத் தொகுத்து வெளியிட்டு வந்த அருணகிரி, பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளையும் எழுதியவர். சமூக வலைதளங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசாரத்தை தீவிரமாக செய்து வந்தார். இதனால், சங்கரன்கோவில் போலீசில் ராஜா என்பவர், இந்து கடவுள்களை அருணகிரி அவதூறு செய்து பதிவிட்டு வருவதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் அருணகிரியிடம் ஏற்கனவே, போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அருணகிரியை ஜூலை 1-ந் தேதி போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் நாத்திக பிரசார கருத்துகளை எழுதியதற்காக அருணகிரி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத வழிபாடு குறித்து அவதுாறாகவும், மற்றவர்களின் உணர்வை புண்படுத்தும் வகையிலும் பதிவிட்டதற்காக அருணகிரியை போலீசார் கைது செய்தனர். அவர் மாஜிஸ்திரேட் சுரேஷ்குமார் முன் ஆஜர்படுத்தப்பட்டு திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.