தென்காசியில் இருந்து 59 சுற்றுலா பயணிகளுடன் ஊட்டிக்கு வந்து திரும்பி செல்லும் வழியில் குன்னூர் - மேட்டுப்பாளையம் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடைய நல்லூரில் இருந்து 59 சுற்றுலா பயணிகள் பேருந்தில் ஊட்டிக்கு வந்து திரும்பி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (69), முருகேசன் (65), இளங்கோ (64), தேவிகலா (42), கௌசல்யா (29), நிதின் (15) ஆகியோர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. நாளை (1-10-2023) பிரேத பரிசோதனை நடக்கிறது.
30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த பயணிகள் குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனிடையே குன்னூர் அரசு மருத்துவ மனை ஊழியர்கள் விரைவில் பணிக்கு திரும்ப மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“