Advertisment

ஜான் பாண்டியனா? டாக்டர் கிருஷ்ணசாமியா? தென்காசியில் முந்துவது யார்?

தென்காசி தொகுதியில் போட்டியிடும் தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தின் இருபெரும் தலைவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் இருவரில் யார் முந்துவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Krishnasamy John Pandian

தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தின் இரு பெரும் மூத்த தலைவர்களான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்தில்ம் எதிரெதிரே போட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் உள்ள ஒரே மக்களவைத் தனித் தொகுதி தென்காசி மக்களவைத் தொகுதி. தென்காசி மாவட்டத்தில், பட்டியல் இனத்தில் ஒரு பிரிவினரான தேவேந்திரகுல வேளாளர்  பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அந்த வகையில், தென்காசி தொகுதியில், தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தின் இரு பெரும் மூத்த தலைவர்களான புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலை சின்னத்திலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்தில்ம் எதிரெதிரே போட்டியிடுவதன் மூலம் தென்காசி மக்களவைத் தொகுதி கவனம் பெற்றுள்ளது.

Advertisment

இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதே போல், தென்காசி மக்களவைத் தொகுதியிலும் (தனி) மும்முனைப் போட்டி நிலவுகிறது.  தென்காசி தொகுதியில், தி.மு.க சார்பில் ராணி ஸ்ரீகுமார் உதய சூரியன் சின்னத்திலும், அ.தி.மு.க கூட்டணியில், புதிய தமிழகம் கட்சித்  தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலும், பா.ஜ.க கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தாமரைச் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் இசைமதிவாணன் ஒலிவாங்கி சின்னத்திலும் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள். 

டாக்டர் கிருஷ்ணசாமியும் ஜான் பாண்டியனும் தென் தமிழகத்தில் பட்டியல் இன மக்கள் இடையே தீவிரமாக செயல்பட்ட தலைவர்கள், இவர்களில் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ-வாக பதவி வகித்துள்ளார். ஆனால், மக்களவைத் தேர்தலில் அவர் இதுவரை ஒருமுறைகூட வெற்றி பெறவில்லை. ஜான் பாண்டியன் அதிரடியான தலைவராக அறியப்பட்டாலும் அவர் இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.

தென்காசி தொகுதியை 1991 வரை காங்கிரஸ் கட்சி தக்கவைது வந்த நிலையில், 1996-ம் ஆண்டு த.மா.கா கைப்பற்றியுள்ளது. அதற்கு பிறகு, 1998, 1999-ல் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. 

அதற்கு பிறகு, தென்காசி தொகுதியில், 2004, 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) வெற்றி பெற்றுள்ளது. 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அ.தி.முக-வும் 2019 தேர்தலில் தி.மு.க-வும் வெற்றி பெற்றுள்ளன. 

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 1996- ம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதுவரை டாக்டர் கிருஷ்ணசாமி 7 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அதில், 1998-ம் ஆண்டு முதல் 6 முறை தென்காசி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இந்த 2024 மக்களவைத் தேர்தலில் 7 வது முறையாக தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை தென்காசி தொகுதியில் வெற்றி பெறாவிட்டாலும்கூட டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பெரும் வாக்கு வங்கியைக் கொண்டுள்ளார்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் 1998 முதல் போட்டியிட்டு வரும் டாக்டர் கிருஷ்ணசாமி 2009-ம் ஆண்டு வரை தனித்து போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து வந்தார். 

இதையடுத்து,  2014-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க வேட்பாளர் வசந்தி முருகேசனிடம் 1,61,774 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில், டாக்டர் கிருஷ்ணசாமி 2,62,812 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 

அதற்கு அடுத்து வந்த, 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்,  அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, தி.மு.க வேட்பாளர் தனுஷ் எம். குமாரிடம் 1,20,286 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2019-ல் டாக்டர் கிருஷ்ணசாமி 3,55,870  வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 

மக்களவைத் தேர்தல் 2024-ல் அதே அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க-வுக்கு ஆதரவாக பேசி வந்தபோதிலும் அவரை பா.ஜ.க பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. 

அதே நேரத்தில், தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் இயக்கங்கள், அமைப்புகள், புதிய தமிழகம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் பட்டியல் இனப் பிரிவில் இருந்து வெளியேறுவதை கோரிக்கையாக வைத்து வருகின்றனர். தங்களை பட்டியல் சாதிகளில் இருந்து வெளியேற்றி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அதுமட்டுமில்லாமல், பள்ளர், காலாடி உள்ளிட்ட சாதிகளை  தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, எனது பெயர் நரேந்திர மோடி, உங்கள் பெயர் தேவேந்திர குல வேளாளர் என்பது ஒரே மாதிரியாக இருக்கிறது என்று கூறியது தேவேந்திர குல வேளாளர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. 

டாக்டர் கிருஷ்ணசாமி எவ்வளவு ஆதரித்துப் பேசியும் பா.ஜ.க அவரை பாராமுகமாக கடந்து சென்றதால் அதிருப்தியில் இருந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில்,  தென்காசி தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். 

அதே போல, தேவேந்திர குல வேளாளர்கள் சமூகத்தின் மற்றொரு பெரிய தலைவரான ஜான் பாண்டியன், தொடர்ந்து பா.ஜ.க-வை ஆதரித்து வந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெறாத ஜான் பாண்டியன் இந்த தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.

தொடர்ந்து, தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமியும் இந்த தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் இருவரில் யார் தென்காசி தொகுதியில் முந்துவார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பையும் கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி தொகுதியில் எதிரெதிராக போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் இருவரில் யார் முந்துவது என்ற போட்டியில், தேவேந்திர குல வேளாளர்கள் வாக்குகளைப் பிரித்துக்கொண்டால், இருவருக்கும் கடுமையான போட்டியாளராக தி.மு.க வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மாறிவிடுவார் என்று தென்காசி கள நிலவரம் உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dr Krishnasamy John Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment