Tenkasi | Coutrallam Falls: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து பல பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென்காசி பழைய குற்றால அருவியில் மக்கள் குளித்துக்கொண்டிருந்தபோது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். அப்போது, வெள்ளத்தில் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த தென்காசி பழைய குற்றால அருவி பகுதியில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். தென்காசி பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
“பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் குற்றாலம் மேலகரத்தைச் சேர்ந்த ஒருவர் அடித்து செல்லப்பட்டார். காட்டாற்று வெள்ளத்தில் காணாமல் போனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது” என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு எதிரொலி:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு பொது மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“