திருச்சி கருமண்டபம் பகுதியில் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
இன்று 10-ம் வகுப்பு, +2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக பள்ளி வளாகத்தில் சாமியானா பந்தல் போடப்பட்டு அதில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர். விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது.
இதில் பின்பக்க சாமியானா பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. இதில் பந்தல் போட பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பிகள் மாணவர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் சில மாணவர்களின் மண்டை உடைந்து ரத்தம் சிந்தியது.
மேலும், சில் மாணவர்கள் பந்தலுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். அங்கு பணியில் இருந்த ஆசிரியருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் பள்ளி வளாகத்தில் ஒரு வித பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
மாணவர்கள் என்ன செய்வது எனத்தெரியாமல் நாலாபுரமும் சிதறி ஓடினர். அதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சில மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு திரண்டனர்.
தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளும் ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளிக்குச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“