/indian-express-tamil/media/media_files/2025/08/13/tet-exam-2025-2025-08-13-11-24-17.jpg)
கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் கல்லறைத் திருநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த விபரம் வருமாறு;
‘இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) வரும் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறும் என ஆகஸ்ட் 11ம் தேதி ஆசியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு வரும் செப்டம்பர் 8ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரான திருச்சி கிழக்கு தொகுதி சட்ட உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது; கல்லறைத் திருநாள் (All Souls Day) என்பது உலகமெங்கும் வாழும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு வரும் ஒரு புனித நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 2-ம் தேதி இறந்தவர்களின் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டு வரும் நாள் தான் கல்லறைத் திருநாளாகும். அந்நாளில் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்கள் அல்லது தங்களின் அன்புக்குரியவர்களின் கல்லறைகள் எங்கு இருக்கிறதோ அந்த ஊர்களுக்கு சென்று கல்லறையினை சுத்தம் செய்து மலர்கள் மற்றும் மெழுகுவர்த்திகள் வைத்து இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஜெபிக்கும் நாளாகும்.
கிறிஸ்தவர்களின் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வரும் நவம்பர் 1, 2-ம் தேதிகளில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கான தகுதி தீர்மானிக்க நடத்தப்படும் தகுதி தேர்வான TNTET Exam 2025 என்கின்ற ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களைத் தொடர்ந்து பாதுகாத்து வரும் தாங்கள், கல்லறைத் திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தரவேண்டும் என்று தமிழகத்தில் வாழும் கிறிஸ்துவர்களின் சார்பாக தங்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.
எங்களது கோரிக்கையை எப்பொழுதும் கூர்ந்து கவனித்து செயல்படுத்தி வரும் தாங்கள் TNTET Exam 2025 ஆசிரியர் தேர்வு தேதியினை வேறு ஒரு நாட்களில் மாற்றி செயல்படுத்தி தருவீர்கள் என்று நம்பிக்கையோடு வேண்டுகோள் வைக்கின்றேன்,’ என கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.