Thabalkaran : Meet the team who walked with him to make documentary : குன்னூர் தபால்காரர் டி.சிவனை நாம் அனைவரும் அறிவோம். அவரின் அளப்பறிய 30 ஆண்டுகால சேவை நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காடுகள், மலைகள், சுரங்கங்கள், வனவிலங்குகள் என அனைத்தையும் தாண்டி சென்று பழங்குடியின மக்களுக்கு தபால்களையும், ஓய்வூதியத்தையும் சென்று சேர்த்ததில் அவருடைய பங்கு மிகப்பெரியது. சுப்ரியா சாஹூவின் ட்வீட்டால் அனைவருக்கும் நன்கு பரீட்சியமாகிவிட்டார். ஆனால் இன்றைய இந்த செய்தி அவரைப் பற்றியது அல்ல. 2018ம் ஆண்டு, மூன்று நாட்கள் அவருடன் நடந்தே சென்று, அவரின் அன்றாட வாழ்வை ஆவணமாக்கிய ஒரு குறும்பட குழு பற்றியது.

பெங்களூருவில் வேலை பார்க்கும் புகைப்பட கலைஞர்கள் ஆனந்த ராம கிருஷ்ணன், அர்ஜூன் க்ருஷ்ணா மற்றும் அர்ஜூன் டாவிஸ் ஆகியோர் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளனர். உதகையில் படித்துக் கொண்டிருந்த மூன்று நபர்களும் நீலகிரி மலை ரயிலில் ஒரு நாள் பயணம் சென்ற போது சிவனை சீருடையில் கண்டுள்ளனர்.
ஹில்குரோவ் ரயில் நிலையம் மிகவும் மலைப்பாங்கான, காடு அடர்த்தியாக உள்ள பகுதியில் அமைந்திருக்கிறது. யார் இவர் சீருடையில் இந்த பக்கம் தனியாய் நடந்து சென்று கொண்டிருக்கிறார் என்று அவர்களுக்கு தோன்ற அவர் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையையும், அதில் இருக்கும் சிவனின் அலைபேசி எண்ணையும் புகைப்படம் எடுத்துவிட்டு அங்கிருந்து இந்த மூவரும் நகர்ந்துவிட்டனர். பின்னர் சிவனை பற்றி விசாரித்த போது தான் அவர் குறித்து தெரிய வந்தது என்றனர்.
சிவனை நேரில் சந்தித்து பேசி, ஐந்து நாட்களில் இந்த படத்தை பதிவாக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர் இவர்கள். முதல் இரண்டு நாட்கள் இந்த திரைப்படம் எப்படி உருவாக வேண்டும் என்று திட்டமிட்டனர். பிறகு மூன்று நாட்கள் திரைப்பட காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் நாம் எதிர்பார்த்தது போல் அது இல்லை. அவருடன் நடந்து சென்று காட்சிகளை படமாக்காவிட்டால், அதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது என்று தினமும் 5 மணி நேரம், 15 கி.மீ, மூன்று நாட்கள் இவர்கள் நடந்து சென்று படத்தை காட்சிப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க : சொந்தச் செலவில் தேடிச் சென்று தபால்களை தருவேன்: யார் இந்த சிவன்?
அவர்களின் உழைப்பிற்கான அர்பணிப்பு ஒன்றும் ஏமாற்றம் அளிக்கவில்லை என்பதை மேலே இருக்கும் குறும்படம் உங்களுக்கு விளக்கும். குன்னூரின் எழில்மிகு, ஆபத்தான மலைக்காடுகளை தவறாமல் பதிவு செய்துள்ளனர் ஷோலா ஃப்லிம்ஸ் குழு. படரும் பனியும், ட்ரோன் கேமராவும் இந்த குறும்படத்தை மேலும் அழகாக்கியுள்ளது. “2018ம் ஆண்டே இந்த குறும்படத்தை யுடியூபில் வெளியிட்டிருப்போம் தான். ஆனாலும் அப்போது வெளியிட்டால் யார் அதை பார்ப்பார்கள். சிவனின் ஓய்வு தொடர்பாக அறிவிப்புகள் வெளியானவுடன், இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியானது” என்று அந்தபடக்குழுவினர் நம்மிடம் கூறுகின்றனர். சிவன் இந்தியா போஸ்ட்டிற்கு செய்த அர்ப்பணிப்பு போற்றத்தக்கது என்றால், அவரின் அர்பணிப்பை அழகாக வெளிக்கொணர்ந்த இம்மூவரின் உழைப்பும் பாராட்டுதலுக்கு உரியது தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
பாலமுருகன் குமாரனின் ட்ரோன் காட்சிகளும், நம்மை அந்த சூழலுக்குள்ளே இழுத்துச் செல்கிறது என்று தான் கூற வேண்டும். அத்தனை அழகு. கனடாவின் வான்கோவரில் படித்த சித்தார்த் இந்த குறும்படத்திற்கு இசை அமைத்துள்ளார். தற்போது ஷாங்காய் வான்கோவர் ஃபிலிம் ஸ்கூலில் பயிற்றுநராக பணியாற்றுகிறார். இதற்காக அவர் மேற்கொண்ட பணிகளும் அளப்பரியது.
சாதாரணமாக ஒரு குறும்படம் என்றால் அதற்கு இத்தனை முக்கியத்துவங்கள் யாரும் தருவது இல்லை. யூடியூப் சேனல் என்று சென்றால் ஆயிர கணக்கில் குறும்படங்கள் என்று கொட்டிக் கிடக்கும். ஆனால் இதுவரை யாராலும் சொல்லப்படாத ஒரு கதையை மக்களுக்காக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அந்த உழைப்பில் உருவானது தான் இந்த படம் என்கின்றனர் இந்த குழுவினர். ”காலையில் சிவனின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு அப்படியே இந்த படத்திற்கான வேலைகளை துவங்கினோம். இன்று இந்த படம் உருவான விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது” என்று கூறும் அவர்கள், சிவன் இமயமலை செல்ல இருப்பதையும் குறும்படமாக எடுக்க முன் வந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil