தைப்பூச திருவிழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி கோயிலில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால், பழனி அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முருகப் பெருமானின் ஆறு படைவீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று (11.02.2025) கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத் திருவிழாவைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பல்வெறு வாகனங்களிலும் வந்து பழனி முருகன் கோயிலில் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.
முருகப் பெருமானின் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் லட்சக் கணக்கான மக்கள் தரிசனம் செய்ய குவிந்ததால், கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பழனி முருகன் கோயிலுக்கு வந்தால் பக்தர்கள் பஞ்சாமிர்தம் வாங்கிச் செல்வது வழக்கம். பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் வழங்குவதற்காக, இந்து அறநிலையத் துறை, பழனி முருகன் தேவஸ்தானம் பழனியில் பல்வேறு இடங்களில் கிளைகளை அமைத்து தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தைப்பூச நாளில் பழனியில் லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், பழனி அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, பழனிக்கு வந்த பக்தர்கள் தனியார் கடைகளில் பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தேவஸ்தான அபிஷேக பஞ்சாமிர்தம் கிடைக்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.