சன் பிக்சர்ஸ் படத்திலும் விஜய்-க்கு ‘தளபதி’ பட்டம் : இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்?

விஜய்-க்கு சன் பிக்சர்ஸ்-ஸின் படத்திலும் ‘தளபதி’ பட்டம் தொடர்கிறது. இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்? என திமுக.வினர் கொதிக்கிறார்கள்.

விஜய்-க்கு சன் பிக்சர்ஸ்-ஸின் படத்திலும் ‘தளபதி’ பட்டம் தொடர்வது சர்ச்சை ஆகியிருக்கிறது. இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்? என திமுக.வினர் கொதிக்கிறார்கள்.

நடிகர் விஜய்-யை ‘இளைய தளபதி’ என்கிற பட்டம் மூலமாகவே நீண்ட காலமாக அவரது ரசிகர்கள் அழைத்து வந்தார்கள். ‘எவ்வளவு காலத்திற்குத்தான் அப்படியே இருப்பது! ஒரு புரமோஷன் வேண்டாமா?’ என விஜய் தரப்பு நினைத்ததோ என்னவோ! விஜய்-யின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் விஜய்-க்கு ‘தளபதி’ என பட்டம் சூட்டினர். மெர்சல் பட விளம்பரங்களில் முழுக்க ‘தளபதி விஜய்’ என்றே குறிப்பிட்டார்கள்.

தளபதி என்கிற வார்த்தையை கிட்டத்தட்ட மு.க.ஸ்டாலினின் பெயராகவே திமுக.வினர் பயன்படுத்தி வருகிறார்கள். திமுக.வின் சாதாரண தொண்டரில் இருந்து, மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் ‘தளபதி’ என குறிப்பிட்டே ஸ்டாலினை நேரில் அழைக்கிறார்கள். இந்தச் சூழலில் விஜய்-க்கு அந்தப் பட்டத்தை மெர்சல் டீம் சூட்டியதை ஏற்காமல் திமுக.வினர் பொங்கினர்.

மெர்சல் படத்திற்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிற கட்சிகள் அனைத்தும் விஜய்-க்கு ஆதரவாக திரண்டன. ஒரு கட்டத்தில் ஸ்டாலினும் ஒரு கண்டன அறிக்கை விட்டார். அந்த அறிக்கையில் விஜய் பெயரையோ, மெர்சல் படப் பெயரையோ கூறாமல் பொத்தாம் பொதுவாக ஸ்டாலின் அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.

2006-2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் விஜய்-க்கும் திமுக.வுக்கும் உருவான பிணக்கு தீராததும், ஸ்டாலினை சீண்டும் விதமாகவே தளபதி பட்டத்தை விஜய் தரப்பு பயன்படுத்துவதும்தான் அதற்கு காரணம். இந்தச் சூழலில் விஜயின் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக நேற்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

திமுக.வுடன் சுமூக உறவில் இல்லாத விஜய் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பது ஒரு ஆச்சர்யம் என்றால், முந்தைய மெர்சல் டீம் பயன்படுத்திய அதே ‘தளபதி’ பட்டத்தை சன் பிக்சர்ஸ் விளம்பரத்திலும் பயன்படுத்தியதுதான்!

சன் குழுமத் தலைவரான கலாநிதி மாறனைப் பொறுத்தவரை, நேரடி அரசியலில் இல்லாதவர்தான். ஆனால் தமிழக அரசியலின் அசைவுகளை உள் வாங்காதவர் அல்ல. அவர் எப்படி இதை அனுமதித்தார்? என்பதுதான் பரவலாக கிளம்பும் கேள்வி! திமுக.வினரே இது குறித்து கொதிப்புடன் விவாதித்து வருகிறார்கள்.

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-சன் பிக்சர்ஸ் என பிரமாண்ட காம்பினேஷனில் உருவாகும் விஜய்-62-க்கு இதுவும் ஒரு விளம்பர உத்தியாக இருக்குமோ?

 

×Close
×Close