ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை : தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 100க்கும் மேற்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சமீபமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் விசாரணை நடைபெற்றது.
ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை
இன்று அதிமுக எம்.பி மற்றும் துணை சபாநாயகரான தம்பிதுரையிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தம்பிதுரை ஆணையத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்ததாக கூறினார்.
அதன் பின்பு சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன், செய்தியாளர்களை சந்தித்து விசாரணையில் நடந்தது என்ன என்று கூறினார். அப்போலோவில் ஜெவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் திருப்திகரமாக அமைந்ததாக தம்பிதுரை கூறியதாகவும், அக்காலத்தில் அடிக்கடி கூட்டம் நடத்தப்பட்டு ஜெ.வின் உடல் நிலை குறித்து பேசியதாகவும் கூறினார்.
அந்த கூட்டங்களில் எல்லாம் ஓ. பன்னீர் செல்வம் உடன் இருந்ததாகவும், அவர் எந்த சந்தேகமும் கேட்கவில்லை என்றும் தம்பிதுரை கூறியதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
விசாரணை ஆணையம் வெறும் கண்துடைப்பு நாடகம் என பேசி வரும் மு.க.ஸ்டாலினிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தம்பிதுரை வலியுறுத்தியதாக ராஜாசெந்தூர்பாண்டியன் அறிவித்தார்.
மேலும் படிக்க : ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கமளித்தார் விஜயபாஸ்கர்