பிரம்மாண்டமாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், அக்கட்சி கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் கொள்கைத் தலைவர்களை அறிவிக்கும் வகையில் 'வெற்றி வாகை' எனத் தொடங்கும் கொள்கைப் பாடல் மாநாட்டு மேடையில் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலில், கொள்கைகளை விஜய் தனது குரலில் விளக்கும் விதமாக காட்சிப்படடுத்தப்பட்டுள்ளது.
பாடலில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே! 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று சொன்ன ஆதியோன் திருவள்ளுவருடைய வழியில், நம்முடைய தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரையும், பார்போற்றும் பெருந்தலைவர் காமராஜரையும், அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரையும், வீரத்தமிழ் மங்கை வேலுநாச்சியாரையும், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளையும் நம்முடைய அரசியல் வழிகாட்டிகளாய் ஏற்று சாதி, மத, பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை உண்டாக்க 'மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகள்' அதாவது 'Secular Social Justice Ideologies' ஓட நம்ம தமிழக வெற்றிக் கழகத்தின் வழியாக உங்களுக்காக உழைக்கணும்னு நான் வரேன்" என விஜய் கூறும் வரிகள் இடம்பெற்றுள்ளன.
இதன் மூலம் மதசார்பற்ற சமூக நீதியை முதன்மையாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் பணியாற்றும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“