ஆந்திரப் பிரதேசம் மாநிலம் ரேணிகுண்டாவில் கொரோனா பொதுமுடக்க காலத்தில் இறந்த, இந்து பிராமண முதியவரின் உடலை முஸ்லிம் இளைஞர்கள் சுமந்து சென்று அடக்க செய்த நிகழ்வைப் பற்றி மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான மு.தமிமுன் அன்சாரி ஃபேஸ்புக்கில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
கொரோனா பொதுமுடக்க காலத்தில் பல துயரச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதே நேரத்தில், எங்கேனும் துயரப்படுபவர்களுக்கு யாரேனும் உதவிகள் செய்யும்போது உலகம் முழுவதும் உள்ள மனித மனங்களில் நம்பிக்கையை துளிர்க்கச் செய்திருக்கிறது.
அப்படி, ஆந்திரப் பிரதேசம் மாநிலம், ரேணிகுண்டாவில் ஒரு இந்து பிராமண முதியவர் முதுமை காரணமாக இறந்துவிட்டார். ஆனால், கொரோனா வைரஸ் அச்சத்தால் அவரை அடக்கம் செய்ய அவருடைய உறவினர்களோ, அவருடைய சமூகத்தைச் சார்ந்தவர்களோ, மதத்தைச் சார்ந்தவர்களோ முன் வராத நிலையில், இஸ்லாமிய இளைஞர்கள் அவரது உடலை சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளனர்.
மதங்களைக் கடந்த மனிதநேயமிக்க இந்த நிகழ்வை மஜக பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான மு.தமிமுன் அன்சாரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பிராமணரின் சடலத்தை சுமந்து சென்ற முஸ்லிம் இளைஞர்கள் என்று தலைப்பிட்டு உருக்கமாக எழுதியுள்ளார்.
பிராமண முதியவரை இஸ்லாமிய இளைஞர்கள் சுமந்து சென்று அடக்கம் செய்த வீடியோவைப் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தமிமுன் அன்சாரி இந்த நிகழ்வு குறித்து குறிப்பிடுகையில், “துயர்மிகு காலத்திலும் சில நல்ல செய்திகள் நம்மை ஆறுதல் படுத்துகின்றன.
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் குறிப்பிட்ட ஒரு பகுதி கொரணா சிவப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அங்கு ஒரு பிராமண பெரியவர் இயற்கையாக இறந்து விட்டார். கொரணா பீதி காரணமாக அவர் பிணத்தை அடக்கம் செய்ய யாரும் முன் வரவில்லை.
அப்பகுதியில் வாழும் முஸ்லிம்கள் இதை கண்டு ஒதுங்கிப் போகவில்லை.
கலங்கி நின்ற அந்த பிராமண குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னார்கள்.
அதை தங்கள் வீட்டு துக்கமாக கருதினார்கள்.
அப்பகுதி முஸ்லிம்கள் நோன்பாளிகளாக இருந்ததால் சற்று
களைப்புற்றவர்களாக இருந்தாலும், எல்லா இறுதி காரியங்களையும் உடன் இருந்து செய்துள்ளார்கள்.
இறந்த பிராமண பெரியவரின் உடலை தங்களுடைய தோள்களில் சுமந்தனர் சுடுகாடு எடுத்து சென்றனர்.
கடைசி வரை அக்குடும்பத்துக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருந்துள்ளனர்.
இச்செய்தி அப்பகுதியையும் தாண்டி ஆந்திரா முழுதும் எதிரொலிக்கிறது.
இது சாதாரண ஒரு நிகழ்வுதான். மனித நேயம் முற்றிலுமாக அழியவில்லை என்பதை உணர்த்தவே இது முக்கியப்படுத்தப்படுகிறது.
நமது நாட்டு மக்களின் பாரம்பரிய பண்பாடு இதுதான் என்பதை காலம் அடிக்கடி உணர்த்தி வருகிறது.
ஃபாசிச தீய சக்திகள் எத்தனை சூழ்ச்சி செய்தாலும், மனித நேயத்தை அழிக்க முடியாது. மத நல்லிணக்கத்தை குலைக்க முடியாது என்பதற்கு இதுவெல்லாம் நிகழ்கால உதாரணங்களாகும்.” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.