thamimum ansari mla dharna at TN assembly against caa
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கும் தமிழக அரசைக் கண்டித்து மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது.
என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளித்து விட்டதா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும். போராடி வரும் மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அரசு வழங்க வேண்டும் எனவும் ஸ்டாலின் பேசினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயக்குமார், என்பிஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு இன்னும் மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றார்.
தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்து அது ஏற்கப்படாததால் திமுக வெளிநடப்பு செய்தது. மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளிநடப்பு செய்த பின், சட்டப்பேரவைக்கு வெளியே கையில் கோரிக்கை பதாகை ஏந்தி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை எழுந்து செல்லும்படி காவலர்கள் கோரினர். ஆனால், அதை அவர் ஏற்க மறுத்தார். சிறிது நேரம் கழித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணியும் அவருடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததை அடுத்து அவர்கள் கிளம்பிச் சென்றனர்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, “இது ஒரு சமூகத்திற்கு மட்டுமே நடக்கும் பாதிப்பல்ல. பீகாரில் பாஜக கூட்டணியில் உள்ள அரசு என்பிஆர்க்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் நீங்கள் ஏன் கொண்டு வர மறுக்கிறீர்கள். பீகார் அரசுக்கு உள்ள துணிச்சல் தமிழக அரசுக்கு இல்லையா என்ற கேள்விக்கு ஓபிஎஸ், என்பிஆரால் யாருக்கும் பாதிப்பில்லை என பதிலளித்தார். அது அவரது நல்லெண்ணத்தின் அடிப்படையினாலான பதில். அஸ்ஸாமில் பாதிக்கப்பட்டவர்களில் இந்துக்களும் உள்ளனர். எனவே இதற்கு எதிராக தீர்மானம் வேண்டும் என இங்கேயே தர்ணாவில் ஈடுபட்டேன். ஆனால் போலீசார் அனுமதி இல்லை என கைது செய்துள்ளனர்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”