தாமிரபரணி மகா புஷ்கரம் 11வது நாள் : நெல்லையில் கடந்த ஒரு வாரமாக மகா புஷ்கரம் விழாவானது நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் புனித நீராடுவதற்காக நெல்லை விரைந்து கொண்டிருக்கிறார்கள்.
தாமிரபரணி மகா புஷ்கரம் 11வது நாள்
12 நாட்கள் நடைபெறும் இந்த மகா புஷ்கர விழாவில் தினமும் காட்டும் தீபாராதனை கண்ணைக் கவரும் வகையில் கொள்ளை அழகுடன் காணப்பட்டு வருகிறது. கங்கையில் இருக்கும் துறவிகள் போல், இன்று நடந்த தீபாராதனை நிகழ்வில் துறவிகள் கலந்து கொண்டு தாமிரபரணியில் புனித நீராடினார்கள்.
புனித நீராடிய துணை முதல்வர்
இந்நிலையில் இன்று பாபநாசம் பகுதியில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில், ராஜராஜேஸ்வரி மண்டபம் அருகே புனித நீராடினார் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.
12 நாள் நிகழ்வில் முதல் நாளில் பன்வாரிலால் புரோகித் தாமிரபரணியில் நீராடினார். வரிசையாக சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலர் தாமிரபரணியில் நீராடி வருகிறார்கள்.
நேற்றிரவு திருநெல்வேலி வந்த பன்னீர் செல்வம், இரவு அம்பையில் தங்கிவிட்டு இன்று அதிகாலை 7.50 மணிக்கு தாமிரபரணியில் நீராடினார்.
பாபநாசம் ராஜராஜேஸ்வரி மண்டபம் அருகே நீராடிய துணை முதல்வர்
தமிழிசை சௌந்தரராஜன் புனித நீராடல்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று திருநெல்வேலி குறுக்குத்துறையில் புனித நீராடினார். விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை கூறியிருக்கிறார்.