திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் நெல்லை வாசிகள் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரளும் உற்சாகமான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2-3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாபநாசத்தில் 185 மி.மீ, மணிமுத்தாறில் 165 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 97 மி.மீ மழை புதன்கிழமை காலை வரை பதிவாகி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சராசரியாக 77.68 மி.மீ மழை பொழிவைக் கண்டுள்ளது. இதனால், குற்றாலம் மெயின் அருவியிலும் பழைய அருவி, ஐந்தருவிகளில் அதிக அளவு நீர் கொடுவதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கனமழையால் நீர் வரத்து அதிகரித்திருப்பதால், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாமிரபரணியில் இருகரையும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. நெல் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியது. அதே நேரத்தில் திருநெல்வேலி நகரத்தில் தாழ்வான சில பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
நேற்று இரவு முதல் மழைபொழிவு குறைந்ததால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் தாமிரபரணியில் பாயும் வெள்ள நீரும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாமிரபரணியில் இருகரையும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் உற்சாகமடைந்த நெல்லை வாசிகள் தாமிரபரணியின் பாய்ச்சலை புகைப்படம், வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"