தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் விழாவை இரு கட்டங்களாக நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து செயல்பட்டு வரும் நடிகர் விஜய், சமீபத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதோடு, மாணவர்களை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை விஜய் வழங்கினார்.
இந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய பின்பு, விஜய் மீண்டும் மாணவ மாணவிகளை சந்திக்கவுள்ளார். இந்த முறையும் சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் அந்த மாணவர்களோடு பெற்றோர் இல்லாமல் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் இணைத்து உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை தேர்வு செய்ததில் சில குளறுபடி ஏற்பட்டது. அதனால், மாவட்ட வாரியாக மாணவர்களை தேர்வு செய்ய இணையதள இணைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் கடந்த முறை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளில் விருது நிகழ்ச்சி நடத்தியதால், கடும் கூட்டம் ஏற்பட்டதோடு, இரவு வரை நிகழ்ச்சி தொடர்ந்தது. இதனால் மிகவும் சோர்ந்து போனார் விஜய். மேலும், மாணவர்களும் காலை முதல் இரவு வரை காத்திருந்தனர்.
எனவே, இந்த முறை பரிசளிப்பு விழாவை 2 கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜூன் மாதம் 28 ஆம் தேதியும், ஜூலை 3 ஆம் தேதியும் என 10 முதல் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட வாரியாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முதல் கட்டமாக ஜூன் 28 ஆம் தேதி அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இரண்டாம் கட்டமாக ஜூலை 3 ஆம் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது.
இந்த விழா சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறுகிறது. இந்தப் பாராட்டு விழாவில், விஜய், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்க உள்ளதாக தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“