திருச்சி ஜெயில் கார்னர் சாலையில் இருந்து பொன்மலைப்பட்டி செல்லும் பகுதியில் பல ஆண்டுகளாக மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக பாதுகாத்து வளர்க்கப்பட்டு வந்த மரங்களை மின்வாரிய ஊழியர்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி அகற்றியதாக தண்ணீர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
2016-ம் ஆண்டு மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக பொன்மலைப்பட்டி செல்லும் சாலையில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. நன்றாக வளர்ந்த மரங்களை அரசு பணி என்று கூறி ஜே.சி.பி இயந்திரம் மூலம் அங்கிருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றியுள்ளனர். இதற்கு தண்ணீர் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தண்ணீர் அமைப்பு சார்பில் நீலமேகம் என்பவர் கூறுகையில், “மரங்கள் மனிதர்கள் உயிர் வாழ பல நன்மைகளை செய்கிறது. மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் வாழும். ஆனால், மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது என்பதே உண்மை.

மரம் வளா்ப்போம், மழை பெறுவோம், வனங்களை காப்போம் என விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் நிலையில், தொழிற்சாலைகளை நிறுவுதல், விமான நிலையங்களை அமைத்தல், ரயில் இரும்பு
பாதைகள் அமைத்தல், அணைகள், பாலங்கள் அமைத்தல், சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல், கல்வி நிறுவனங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மரங்களை அழித்ததில் அரசு தான் முக்கியப் பங்கு வகிக்கிறது.

விலங்குகளை பாதுகாக்க ப்ளூ கிராஸ் அமைப்பு இருப்பது போல், மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு, பறவைகளுக்கு பயன் தருகிற மரங்களை பாதுகாக்க, கண்காணிக்க Brown Cross அமைக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
செய்தி: க. சண்முகவடிவேல், திருச்சி</strong>
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil