"அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது தானே?" - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி

டிடிவி தினகரனை அவரது உதவியாளரிடம் மிகக் கடுமையாக விமர்சித்து தங்க தமிழ் செல்வன் பேசுவது போன்று ஆடியோவில் இடம்பெற்றுள்ளது

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தங்க தமிழ்ச் செல்வன் மனதில் பட்டத்தை பட்டென்று பேசும் நபர் என்பது அரசியல் களத்திலிருக்கும் அனைவருக்கும் தெரியும். அரசியல் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பவர். அதிலும் தேர்தலுக்கு முன்பு வரை, அதிமுக அரசை தனது கடும் விமர்சனங்களால் கிழித்து தொங்கவிட்ட தங்க தமிழ்ச் செல்வன், மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, ஆழ்ந்த மௌனத்துக்கு சென்றுவிட்டார்.

குறைந்தபட்சம், தனது வழக்கமான எதிரணியை விமர்சிக்கும் ஸ்டன்ட் கூட அவர் எடுக்கவில்லை. ஆள் இருக்கிறாரா என்று தேடும் அளவுக்கு அமைதியானவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘தேர்தலில் தோற்றுவிட்டோம். இனி யாரை விமர்சித்து என்ன ஆகப் போகிறது? அதனால், ஜெயித்துவிடப் போகிறோமா?. தோல்விக்கு என்ன காரணம் என்று, தீர ஆராய வேண்டியது தான் இப்போது அவசியம். ஆனால், மக்கள் இவ்வளவு பெரிய தோல்வியை தருவார்கள் என எதிர்பாக்கவில்லை. மனதளவில் நான் எவ்வளவு வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று எனக்கும், என் குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும். தேனி மக்களே என்னை இப்படி தோற்கடிப்பார்கள் என்று எண்ணவில்லை” என்று புலம்பினார்.

இதற்கிடையே, தங்க தமிழ்ச் செல்வன் தனது தாய்க் கழகமான அதிமுக-வில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்துக் கொண்டே இருந்தன. இதுகுறித்த கேள்விக்கு கூட உறுதியாக மறுப்புத் தெரிவிக்காத தங்க தமிழ்ச் செல்வன், ‘இப்போதைக்கு நான் மக்களை சென்று பார்ப்பதே முக்கியம்’ என்று சொல்லிவிட்டு, ‘பிளாஸ்டிக் ஒழிப்பில் முனைப்பு காட்டிய முதல்வர் பழனிசாமியின் செயல்பாடு என்னை மிகவும் கவர்ந்தது’ என தெரிவிக்க, அவரது அதிமுக சங்கமித்தல் பற்றிய செய்திகள் மேலும் தீவிரமாயின.

இதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம், டிடிவி தினகரன் மீது அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவது தான். இந்நிலையில், தற்போது சமூக தளங்களில் ஆடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், டிடிவி தினகரனை அவரது உதவியாளரிடம் மிகக் கடுமையாக விமர்சித்து தங்க தமிழ் செல்வன் பேசுவது போன்று ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.

அந்த ஆடியோவில் தங்க தமிழ் செல்வன் பேசியது பின்வருமாறு, ”

தங்க தமிழ் செல்வன் – அண்ணன் இருக்காரா?

அமமுக நிர்வாகி – நான் ஊருக்கு வந்திருக்கேண்ண!

தங்க தமிழ் – இந்த மாதிரி ஒரு பொட்டத்தனமான அரசியலை நிறுத்த சொல்லுப்பா உங்க அண்ணன.. நான் வந்து விஸ்வரூபம் எடுத்தா, உண்மையிலேயே அழிஞ்சு போய்டுவீங்க. நீ உட்பட அழிஞ்சு போவ.. நான் நல்லவன். தேனி மாவட்டத்துல கூட்டம் போடுறது “………….” , நாளைக்கு நான் மதுரையில கூட்டம் போடுறேன் வெண்ண. நீ பாரு.. என்ன நடக்குதுன்னு பாரு.

அமமுக நிர்வாகி – சரிண்ணே..

தங்க தமிழ் – ஆனா, இந்த மாதிரி பேடித் தனமான அரசியல்வாதிய, உங்க டிடிவி தினகரன்ட்ட சொல்லு.. இந்த மாதிரி அரசியல் பண்ண வேணாம், நீ தோத்துப்போவ, என்னைக்கும் ஜெயிக்க மாட்ட”

என்று மிக காட்டமாக பேசுகிறார்.

இந்நிலையில், இன்று இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தங்க தமிழ்ச் செல்வன், “கட்சியைப் பற்றி நான் பேசியது உண்மை தான். கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து நான் கருத்து கூறினேன். அது பிடிக்காவிட்டால், என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்க வேண்டியது தானே?. அதைவிடுத்து, ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு இப்படி சமூக தளங்களில் தவறான கருத்துகளை பரவ விடுவது என்னை வருத்தப்பட வைக்கிறது” என்று பதில் அளித்திருக்கிறார்.

அந்த ஆடியோவில் பேசியது நான் தான் என தங்க தமிழ்ச் செல்வன் ஒப்புக் கொண்டிருப்பது, அரசியல் வட்டாரத்தில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close