அது நேற்று… இது இன்று! தங்க தமிழ்செல்வன் மாற்றிப் பேசும் பின்னணி இதுதான்

தங்க தமிழ்செல்வன் வாயாலேயே மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவிப்பை வெளியிட வைத்ததுதான் அனைவராலும் கவனிக்கப்பட்டது.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

மேல் முறையீடு செய்ய மாட்டேன் என கூறிய தங்க தமிழ்செல்வன் வாயாலேயே மேல் முறையீடு பற்றிய அறிவிப்பை வெளியிடச் செய்தார் பாருங்கள்! அங்க நிற்கிறாரு, ‘அரசியல்வாதி’ டிடிவி தினகரன்!

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, சுந்தர் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியபோது கொந்தளித்தவர் தங்க தமிழ்செல்வன். ‘நான் அப்பீலுக்கு போகமாட்டேன். யாரோ ஒருவர் என் தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாக வந்துவிட்டுப் போகட்டும்’ என்றார். பின்னர் அவரும் மேல்முறையீடில் இணைந்தது தனிக்கதை!

கடந்த 25-ம் தேதி 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், சபாநாயகர் தனபாலின் நடவடிக்கை சரியே, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று 3-வது நீதிபதி சத்தியநாராயணா தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து டி.டி.வி. ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம் இன்று மதுரையிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மேல்முறையீடு செய்ய தங்க தமிழ்செல்வன் எதிர்ப்பு தெரிவிப்பாரோ? என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்திக்கும் பொறுப்பு தங்க தமிழ்செல்வனிடமே ஒப்படைக்கப்பட்டது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அ.ம.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன், “உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யவுள்ளோம். சபாநாயகர் தனபால் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார். நம்பிக்கை தீர்மானத்தின் போது, ஓட்டு மாற்றி போட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ். உட்பட 11 பேர் மீது இதுவரையில் நடவடிக்கை இல்லை. எங்களுக்கு அளித்துள்ள தீர்ப்பில் நிறைய குறைபாடுகள் உள்ளதாக எங்கள் வழக்கறிஞர் கூறியுள்ளார். சட்டப்பேரவை தலைவர் செய்தது தவறு என்பதை மக்களுக்கு சுட்டிக் காட்டுவதற்காகத் தான், மேல்முறையீடு செய்வதாக நாங்கள் அனைவரும் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம்.

ஒருவேளை நாளையே இடைத்தேர்தல் வந்தாலும், அதைச் சந்திக்க தயாராகவுள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, நாங்கள் 18 பேரும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த தடையுமில்லை.” என்றார்.

மேல் முறையீடை எதிர்த்த தங்க தமிழ்செல்வன் வாயாலேயே மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவிப்பை வெளியிட வைத்ததுதான் அனைவராலும் கவனிக்கப்பட்டது. வேறு யாராவது இதை அறிவித்தால், ‘இதை தங்க தமிழ்செல்வன் ஏற்றுக்கொண்டாரா?’ என்கிற கேள்வி எழுந்திருக்கும். அதை தவிர்க்கவே தங்க தமிழ்செல்வம் வாயால் அதை அறிவிக்க வைத்தார் டிடிவி தினகரன்.

இந்த அறிவிப்பின் பின்னணியில் 2 காரணங்கள் இருக்கின்றன. இப்போதைய சூழலில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் தேர்தல் களம் அதிமுக-திமுக இடையிலான மோதலாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. ஆர்.கே.நகர் என ஒற்றைத் தொகுதியில் காட்டிய மும்முரத்தை 20 தொகுதிகளிலும் டிடிவி தினகரன் காட்டுவது சாத்தியமல்ல.

மற்றொரு காரணம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் வேட்புமனுக்களையும் தேர்தல் அதிகாரியாக அமரும் ஆர்.டி.ஓ அந்தஸ்திலான அதிகாரியை இன்ப்ளுயன்ஸ் செய்து ஆளும்கட்சி தள்ளுபடி செய்துவிடக்கூடும். அதனால் 18 பேரும் தேர்தலில் போட்டியிட முடியாமல், அதற்காகவும் தனியாக நீதிமன்றப் படியேற வேண்டியிருக்கும்.

அதைவிட ஒரேயடியாக உச்ச நீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தி தங்களுக்கு ஆதரவாக உத்தரவு பெற்றுவிடுவதே சிறந்தது என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் காலியானதாக தமிழக சட்டமன்ற செயலகம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. தகுதிநீக்க வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் தான், தேர்தல் ஆணையம் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த அக்டோபர் 25ம் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய தவறும் பட்சத்தில், சட்டமன்ற செயலகம் அனுப்பிய அறிவிக்கையை ஏற்று 18 தொகுதிகளும் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும். அதனை தடுப்பதற்காகவே மேல்முறையீடு அஸ்திரத்தை டி.டி.வி. தரப்பு எடுத்ததாக கூறப்படுகிறது.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thanga tamilselvan 18 mlas appeal against judgement

Next Story
அன்று நக்கீரன் கோபால்… இன்று சுந்தரவள்ளி! பொங்கும் செயல்பாட்டாளர்கள்sundaravalli speech, munaivar sundaravalli, prof.sundaravalli, dr.sundaravalli, சுந்தரவள்ளி மீது வழக்கு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express