டிடிவி தினகரன் அணியில் பிளவு... தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு!

மீதியுள்ள 17 எம்.எல்.ஏக்கள் வழக்கை வாபஸ் பெற மாட்டார்கள் என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற தங்க தமிழ்ச்செல்வன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் கடந்த ஜூன்14 ஆம் தேதி மாறுப்பட்ட தீர்ப்பு வெளியானது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பில், ‘சபாநாயகர் உத்தரவு செல்லும்’ என கூறப்பட்டிருக்கிறது. நீதிபதி சுந்தர் உத்தரவில், ‘சபாநாயகர் உத்தரவு செல்லாது’ என கூறப்பட்டிருக்கிறது. எனவே 3-வது நீதிபதி விசாரணைக்கு வழக்கு செல்கிறது.

தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு, தகுதி நீக்கசெய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். சந்திப்பிற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றாலும் அடுத்த நகர்வாக சுப்ரீம் கோர்ட்டு செல்லமாட்டோம் என்று கூறியிருந்தார்.

அதே நேரத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், 18 எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்பு சுப்ரீம் கோர்ட்டு செல்வோம் என்று கூறினார். இவரின் முரண்பாடன கருத்துக்களை மற்ற அரசியல் தலைவர்கள் விமர்சித்து இருந்தனர்.

இதுக்குறித்து விளக்கம் அளித்த டிடிவி தினகரன், தங்கத்தமிழ்ச்செல்வனின் முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்றும், ஒருவேளை அவர் இந்த வழக்கை வாபஸ் பெற்றாலும் மீதியுள்ள 17 எம்.எல்.ஏக்கள் வழக்கை வாபஸ் பெற மாட்டார்கள் என்று உறுதியாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான், தங்க தமிழ்ச்செல்வன், தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தங்க தமிழ்ச்செல்வன் வழக்கை வாபஸ் பெற்றால் அவரது தொகுதிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும். தங்க தமிழ்ச்செல்வனின் இந்த முடிவு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close