18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் அடுத்தக்கட்ட நகர்வை குறித்து தங்க தமிழ்செல்வன் பேட்டியளித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு:
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியாகியது.தினகரன் ஆதரவு பெற்ற 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் என்று 18 எம்எல்ஏக்கள் பெரிதாக நம்பி இருந்தனர். ஆனால் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு பாதகமாக அமைந்தது. தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த அமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களுடன் கலந்து யோசித்து அடுத்த முடிவு எடுக்கப்படும் என்றார்.
டிடிவி தினகரன் ஆலோசனை:
இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்புக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக டிடிவி தினகரன் தலைமையில் இன்று (26.10.18) காலை முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா? அல்லது தேர்தலை சந்திப்பதா? என அனைவரும் கலந்து யோசித்தனர்.
தங்க தமிழ் செல்வன் பேட்டி:
இந்நிலையில், இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏவும், தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்ச்செல்வன் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு எடுத்திருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ”மேல்முறையீடு நடக்கும்போது இடைத்தேர்தல் வந்தாலும் மீண்டும் அமமுக சார்பில் 18பேரும் போட்டியிடுவோம்.நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த தடையுமில்லை நவம்பர் 10 முதல் 22 தொகுதிகளில் அமமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும்” என்று தெரிவித்தார்.