தங்க தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்கிறது: அட்வகேட் ஜெனரல் நோட்டீஸ்

தங்க தமிழ்செல்வன் அளிக்கும் பதிலைப் பொறுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் எனத் தெரிகிறது.

Thanga Tamilselvan get notice for criticising Chief Justice Indira Banerjee
Thanga Tamilselvan get notice for criticising Chief Justice Indira Banerjee

தங்க தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி தீர்ப்பை விமர்சித்தது தொடர்பாக சிக்குகிறார் அவர்!

தங்க தமிழ்செல்வன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார். டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்டு இயங்கும் இந்த கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 3-வது நீதிபதியாக எம்.சத்யநாராயணன் விசாரிக்க இருக்கிறார்.

இதற்கிடையே மாறுபட்ட தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, டிடிவி அணியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் சில விமர்சனங்களை முன்வைத்தார். ‘நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லாததால், மேல் முறையீடு செய்யப் போவதில்லை’ என்றும் குறிப்பிட்டார் அவர்.

தங்க தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், ‘தலைமை நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என கேள்வி எழுப்பினார். தங்க தமிழ்செல்வனின் விமர்சனங்கள் தொடர்பாக பெண் வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயன் ஒரு நோட்டீஸை தங்க தமிழ்செல்வனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தலைமை நீதிபதியை விமர்சித்தது தொடர்பாக அந்த நோட்டீஸில் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு தங்க தமிழ்செல்வன் அளிக்கும் பதிலைப் பொறுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் எனத் தெரிகிறது.

பொதுவாக தமிழக முதல்வர் அல்லது அமைச்சர்களை அவதூறு செய்கிறவர்கள் மீது அரசு வழக்கறிஞர் புகார் கொடுக்க, சென்னை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்படும். தலைமை நீதிபதி மீது அவதூறு செய்ததாக அட்வகேட் ஜெனரலே நோட்டீஸ் அனுப்பியிருப்பது அபூர்வமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Thanga tamilselvan get notice for criticising 18 mlas disqualification case verdict

Next Story
ஆறாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் கொடுமை: ஆசிரியருக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com