Thanga tamilselvan joinned dmk : அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அமமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுக நிர்வாகி உடன் சமீபத்தில் பேசிய வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுக் குறித்து பேசிய டிடிவி தினகரன் தங்க தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், அமமுக -வில் அனைத்து பொறுப்பிலிருந்தும் தங்க தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் கட்சியிலிருந்து நீங்குவது உறுதியானது. அமமுக- வை விட்டு விலகி தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக அல்லது திமுக வில் இணைவார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தமிழ் தமிழ்ச்செல்வன் அதிமுக -வில் இணைய ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு தேனியிலிருந்து நேற்று இரவு சென்னை வந்தார். பல்வேறு யோசனைகளுக்கு பிறகு தங்க தமிழ்ச்செல்வன் இன்று திமுக-வில் இணைந்தார். பிற்பகல் 12 மணி அளவில் அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இந்த இணைப்பின்போது துரைமுருகன், செந்தில் பாலாஜி உள்பட பலர் இருந்தனர்.
திமுக கரைவேட்டியுடன் தங்க தமிழ்ச்செல்வன்
ஏற்கனவே அமமுக-வில் இருந்து விலகி செந்தில் பாலாஜி,வி.பி கலைராஜன் ஆகியோர் திமுக-வில் இணைந்த நிலையில் இப்போது தங்க தமிழ்ச்செல்வனும் திமுக-வில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பலரின் கவனத்தையும் திருப்பியுள்ளது.
திமுக-வில் இணைந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். மேலும், திமுக-வில் இணைந்ததற்கான காரணத்தையும் விளக்கினார்.
தங்க தமிழ்செல்வன் பேசியதாவது, “ திமுக தலைவர் ஸ்டாலினால் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு காட்டியுள்ளது. இந்த தேர்தல் முடிவுக்கு பின்னரே இந்த நல்ல தலைமையை ஏற்று திமுக-வில் இணைந்துள்ளேன். மு.க.ஸ்டாலினால்தான் நல்ல தலைமை கொடுக்க முடியும் . ஸ்டாலின் கடுமையான உழைப்பாளி கலைஞர் இறந்த நாளில் நீதிமன்றம் சென்று மெரினாவில் இடம் பெற்றார்.
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அனைத்து நிர்வாகிகளுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் கட்சி மட்டுமே சிறந்த கட்சியாக திகழும்.அப்படி செயல்பட்ட காரணத்தினால் தான் திமுக தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக -வின் நிலை இப்போது மிகவும் மோசமாக உள்ளது. பிஜேபி அதிமுகவை இயக்கிக் கொண்டு வருகிறது. தன்மானத்தை இழந்து நான் அங்கு போய் சேர விரும்பவில்லை" என்றார்.
திமுக-வில் உங்களுக்கு என்ன பதவி தருவார்கள் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய தங்க தமிழ்ச்செல்வன் “ கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.