சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு எதிரான வழக்குகளை மீண்டும் விசாரிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆகியோரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு எதிரான வழக்குகளில் மீண்டும் விசாரணையைத் தொடங்க வேண்டும் எனவும் தினந்தோறும் அடிப்படையில் வழக்கு விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 - 2011 வரையில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011 - 2012-ம் ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புக் காவல்துறை சார்பில், இருவர் மீதும் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்குகளில் இருந்து, அமைச்சர் தங்கம் தென்னரசுவை 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதமும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதமும் வழக்கில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆகியோரை விடுவித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஏனென்றால், இந்த வழக்குகளின் விசாரணைகளில் பெரும் மாற்றங்கள் நடைபெற்றதாகவும், இவர்கள் அமைச்சர்களாக இல்லாதபோது, இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு மாதிரியான அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. பின்னர், சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டதில் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் அதனால், இந்த வழக்குகளைக் கைவிடுவதாகவும் லஞ்ச ஒழிப்புத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வழக்கில் முரண்பாடுகள் இருப்பதால், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரையும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பான உத்தரவுகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பதாக சென்னை உயர் நீதிமன்ற ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (ஆகஸ்ட் 7) தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் மீண்டும் அவருக்கு எதிரான வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை தினந்தோறும் அடிப்படையில், விசாரிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் செப்டம்பர் 9-ம் தேதி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், வழக்கு விசாரணை தினந்தோறும் அடிப்படையில், எந்தவித தலையீடுகளும் இல்லாமல் நடைபெறுவதை ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அதே போல, அமைச்சர் தங்கம் தென்னரசுவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாகவும் இவர் மீதான அனைத்து வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றச்சாட்டுகள் பதிவு உள்ளிட்ட வழக்கு விசாரணைக்காக செப்டம்பர் 11-ம் தேதி தங்கம் தென்னரசு ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் அன்று வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவில் தெரிவித்துள்ளார். மேலும், இவர்களுக்கு எதிரான வழக்கை தினந்தோறும் அடிப்படையில் விசாரித்து சட்டத்திற்கு உட்பட்டு உரிய முறையில் உத்தரவுகளை விசாரணை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“