scorecardresearch

இந்தியில் திமுக இரட்டை வேடமா? ஓ.பி.எஸ் புகார்; தங்கம் தென்னரசு ரியாக்ஷன்

இந்தி மொழி விவகாரம்; திமுக இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் தாக்கு; முதல்வரின் கருத்துக்கு உள்நோக்கம் கற்பிப்பதா என தங்கம் தென்னரசு கண்டனம்

இந்தியில் திமுக இரட்டை வேடமா? ஓ.பி.எஸ் புகார்; தங்கம் தென்னரசு ரியாக்ஷன்

Thangam Thennarasu condemns OPS on hindhi issue: இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமித்ஷாவின் இந்தித் திணிப்பு பேச்சுக்கு பதிலளித்த முதல்வரின் நிலைப்பாட்டுக்கு உள்நோக்கம் கற்பிப்பதா? என்று அமைச்சர் தங்கம் தென்னரசு ஓபிஎஸூக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ் மொழியை வளர்ப்பது என்பது பிற மொழி பேசுபவர்களைத் தமிழ் கற்றுக் கொள்ள வழிவகை செய்வதும், பெரும் மாநிலங்களில் உள்ள மக்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவையாகும்.

ஆனால், தமிழக முதல்வர் தன்னை வளர்த்துக் கொள்ளும் பணியில், தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பணியில்… இந்தி மொழியை வளர்த்து வருகிறார் எனத் தகவல்கள் வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசிய தலைவராகப் பிரபலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பெற வேண்டும் என்பதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்படுகிறது.

மேலும் தொல்லியல் துறை இணையதளத்தில் இந்தி மொழியில் அறிவிப்புகள் இருப்பதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. ஒரு பக்கம் இந்தி திணிப்பு என்று கூறி தமிழுக்குப் போராடுவது போல் நடிப்பது… மறுபக்கம் இந்தியில் தி.மு.க தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க.

தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்குப் பேரறிஞர் அண்ணா கூறிய இரு மொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் இந்தியை தி.மு.க தலைவர் பயன்படுத்துகிறார்? என்று மக்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்குத்தான் உபதேசம் போலும்.

தி.மு.க அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அ.தி.மு.க சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க-வின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர் இந்த ஏமாற்றம் வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி அ.தி.மு.க ஆட்சியில் அமர வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் ஓபிஎஸின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ”அதிமுகவின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்த உடனேயே, நாளும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அந்தக் கட்சியில் தன்னுடைய இருப்பைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டிருக்கின்றார் என்பதை நாடு நன்றாக அறியும். ஆனால், இன்றைக்கு இந்தியத் திருநாட்டில் உள்ள முதல்வர்களில் முதன்மையானவர் என பல்வேறு அரசியல் தலைவர்களும், ஊடகங்களும், இந்திய அரசியலை உன்னிப்பாகக் கவனித்து வரும் அரசியல் நோக்கர்களும் நம்முடைய முதல்வரைப் போற்றுவது கண்டு மனம் பொறுக்காமல், ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் சொத்தை வாதம் ஒன்றைத் தூக்கிக் கொண்டு, அதன் பேரில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு ஓ.பன்னீர் செல்வம் குளிர்காய முற்பட்டு இருக்கின்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று சொன்னவுடனேயே, தமிழ் நாட்டின் தலைமகனாக இருக்கும் நம்முடைய முதல்வர், உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல் என்றும் ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது; ஒருமைப்பாட்டையும் உருவாக்காது எனவும் தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தனது நிலைப்பாட்டினை உறுதிபடத் தெரிவித்தார்.

ஆனால், இன்றைக்கு மொழிப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு வீராவேசமாக அறிக்கை விடும் ஓ.பன்னீர் செல்வம், சட்டப்பேரவையில் தனக்குப் பக்கத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்துக் குறித்துத் தனக்கு ‘ஒன்றுமே தெரியாது’ என நழுவிக்கொண்டதை மட்டும் ஏன் வசதியாக மறந்து விட்டார் எனத் தெரியவில்லை. உண்மையான தமிழ் உணர்வும், அக்கறையும் இருக்குமானால் எடப்பாடி பழனிச்சாமியின் இந்தப் பாசாங்குச் செயலைத்தான் ஓ. பன்னீர் செல்வம் கண்டித்திருக்க வேண்டுமே அல்லாமல் முதல்வர் மீது உள்நோக்கம் கற்பிக்க முனைந்திருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.

இதையும் படியுங்கள்: அம்பேத்கர்- மோடி ஒப்பீடு கருத்தில் இளையராஜா உறுதி: கங்கை அமரன் தகவல்

பன்னீர் செல்வம் உலக நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவிப்பது குறித்தும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கின்றார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தான் ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைக்கு ரூபாய் 1.25 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது என்பதனையும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்களது பெயரில் செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர், செம்மொழிச் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதற்கட்டமாகத் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஐந்து பல்கலைக் கழகங்களில் ‘செம்மொழித் தமிழ் இருக்கைகள்’ அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்திருப்பதையும் அவருக்கு நான் நினைவூட்டக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

அது மட்டுமல்ல. தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகளாவிய வகையில் எடுத்தியம்பும் வண்ணம் தமிழகத்தின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழின் தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியை முதல்வர் உருவாக்கி இருக்கின்றார்.

இத்தகைய ஆய்வு முடிவுகளையும், அவை சார்ந்த அறிவிப்புக்களையும் சமூகநீதி சார்ந்த முன்னெடுப்புகளையும் தமிழ் கூறும் நல்லுலகமும், ஆய்வு நெறி சார்ந்த அறிஞர் பெருமக்கள் மட்டுமன்றி இந்திய அளவில் வெகுமக்களும் தெரிந்து கொள்ள வகை செய்யும் வண்ணம்தான் செய்தி- மக்கள் தொடர்புத்துறை பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள் தவிர்த்து ஏனைய நூல்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அன்றைய முதல்வரால் 19-02-2019 அன்று வெளியிடப்பட்டதை ஓ. பன்னீர் செல்வம் மறந்திருந்தாலும் இத்தகைய அறிக்கைகளை வெளியிடும் முன்னர் தனது பழைய நண்பர் அன்றைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thangam thennarasu condemns ops on hindhi issue