/indian-express-tamil/media/media_files/ngudA4RcmOQULwjcs61v.jpg)
Thangam Thennarasu, KKSSR Ramachandran case
தலைமை நீதிபதி அனுமதி பெற்றுதான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பதவி வகித்தனர்.
இந்த காலக்கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, இரண்டு தனித் தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவிமணிமேகலை, மற்றொரு வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி உட்பட மூவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ.எஸ்.ஆர்.ராமசந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ’கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சட்ட விரோதம் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுகிறது. எனவே இந்த வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி விலக வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.
அதேபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், ’நீதிமன்றத்தின் கவனத்துக்கு வரக்கூடிய ஒரு விஷயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும்’ என வாதிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, ’தலைமை நீதிபதி அனுமதி பெற்றுத்தான் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன். எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை. வேண்டும் என்றால், இந்த வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கும், அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9-ம் தேதிக்கும் ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ராமச்சந்திரன், தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிட த்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.