Nirmala Sitharaman | Thangam Thennarasu: மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்த கருத்துக்கு இன்று அவர் பதில் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசியது பின்வருமாறு:
ஆட்சிக்கு வந்த போது கடும் நிதி நெருக்கடியிலும் கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்பட்டது. மகளிருக்கு கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பயன்தரும் பல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது. ஒருபோதும் திமுக அரசால் செய்யமுடியாது என கூறப்பட்ட மகளிர் உதவித்தொகை திட்டத்தில் ரூ.1.15 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 பெறுகின்றனர். நிதி நெருக்கடிக்கு இடையே மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.
தற்போது பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.6,000 வழங்கப்பட உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியை தமிழக அரசு சிறப்பாக கையாள்கிறது. மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு ரூ.4.75 லட்சம் கோடி மட்டுமே கொடுத்துள்ளது.
2014ம் ஆண்டு முதல் 2023 மார்ச் வரை தமிழ்நாட்டில் இருந்து ரூ. 6.23 லட்சம் கோடி நேரடி வரி வருவாயாக ஒன்றிய அரசு பெற்றுள்ளது. ஆனால், மறைமுக வரிவருவாய் குறித்து எந்த தரவுகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களைபோல் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை.
தமிழ்நாடு அரசு நிதி பகிர்வாக வழங்கும் ஒரு ரூபாயில் 29 பைசாவை மட்டும் தான் மத்திய அரசு திரும்ப அளிக்கிறது. ஆனால், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்த விகிதம் முற்றிலும் மாறுபட்டு உள்ளது
2014ல் இருந்து 2023 மார்ச் வரை உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரூ. 2.23 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு கொடுத்தால் ரூ. 15.35 லட்சம் கோடி திரும்ப கிடைத்துள்ளது.
சென்னை மெட்ரோ 2வது கட்ட திட்டம் ரூ. 63,246 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 50% நிதியை ஒன்றிய அரசு தரவேண்டும். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்று வரை அதற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
இதே காலகட்டத்தில் மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்தில் ஒன்றிய அரசு ரூ. 72,000 கொடுக்கிறது. தமிழ்நாடு அரசு ரூ. 1.68 லட்சம் கொடுக்கிறது.
மத்திய அரசின் திட்டங்களாக இருந்தாலும் சரி, அவர்களின் நிதியுதவியுடன் நடக்கும் திட்டங்களாக இருந்தாலும் சரி மாநில அரசு அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. பெற்ற வரியை விட 2 மடங்காக நிதி கொடுத்துள்ளோம் என 10 ஆண்டுகளாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், விலைவாசி உயர்வு, பண மதிப்பு அதிகரிப்பு ஆகியவற்றை எல்லாம் அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.
மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்காக கோரப்பட்ட நிவாரண நிதியை மத்திய அரசு தற்போது வரை வழங்கவில்லை. மாநில அரசின் நிதியிலே, இதுவரை ரூ. 2027 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு தமிழக அரசு 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் முழுவதும் மாநில அரசின் நிதியில் நடக்கிறது. மத்திய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாக பணிகளை முடிக்க முடியும். தமிழ்நாடு அரசு வாங்கும் கடன்களை முதலீட்டுக்குள் கொண்டு வருகிறது. கடன் வாங்கும் தன்மையை தமிழ்நாடு அரசு எப்போதும் சரியாக மேலாண்மை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.