அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு, திமுக உரிமைகோரி ஸ்டிக்கர் ஒட்டி புகழ்ச்சி அடைய வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், ஸ்டிகர் ஒட்டும் கலாச்சாரத்தை தொடங்கி வைத்ததே அதிமுகதான் என்றும் அதிமுக திட்டங்களுக்கு பேரு வச்சீங்களே சோறு வச்சிங்களா என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “சென்னை மெட்ரோ, கோயம்பேடு பேருந்து நிலையம், திருவள்ளுவர் படம் என அதிமுக ஸ்டிக்கர் ஒட்டாத இடமே இல்லை..” என்று அதிமுகவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: “எதிர்க்கட்சித் தலைவர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு அதிமுக அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு தன்னுடைய ஸ்டிக்கர்களை ஒட்டுகிறது என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.
நான் கேட்க விரும்புவது தமிழ்நாட்டிலே, இப்படி ஒரு ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய கலாச்சாரத்தை துவக்கி வைத்தது யார் ஆட்சி என்பதுதான். ஒரு ஆட்சியே ஸ்டிக்கர் ஆட்சி என்று மக்களால் சொல்லப்பட்ட ஆட்சி அதிமுக ஆட்சி என்பதை எடப்பாடி பழனிசாமி வசதியாக மறந்துவிட்டாரா என்று நான் கேட்க விரும்புகிறேன்.
2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களிலே ஸ்டிக்கர் ஒட்டத் துவங்கி, கலைஞர் பெயர் மீது ஸ்டிக்கர் ஒட்ட ஆரம்பித்து, தெய்வப் புலவர் திருவள்ளுவர் படத்தையே ஸ்டிக்கர் ஒட்டி மறைத்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. அதுமட்டுமல்ல, அன்றைக்கு, அவர்களுடைய ஆட்சியில் கஜா புயல் வந்தபோது, சென்னை பெரு வெள்ளத்தில் மூழ்கியபோது, அதற்காக பல்வேறு தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ஆர்வலர்கள் ஒவ்வொரு இடத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியபோது, அப்படி தனியார்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களிலேகூட கொஞ்சம்கூடம் கூச்சமில்லாமல் அதிமுகவினரை வைத்து அவர்களுடைய பெயரையும் ஸ்டிக்கரையும் ஒட்டிக்கொண்டது அதிமுக ஆட்சி என்பதை மறந்துவிடக் கூடாது.
இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், பொங்கலுக்காக கொடுக்கப்பட்ட கருப்புகளில் ஒவ்வொரு கரும்பிலும் ஒவ்விரு கணுக்களிலும் ஸ்டிக்கர் ஒட்டிய கட்சிதான் அது.
இன்றைக்கு நம்முடைய முதலமைச்சரின் ஆட்சியில், பொங்கல் பையாக இருந்தாலும் எந்த பரிசாக இருந்தாலும், அதில் முதலமைச்சருடைய படம் கூட இல்லாத ஒரு நல்ல சூழ்நிலை உருவாக்கியிருக்கக்கூடிய திமுக ஆட்சி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி என்பதை தெரிவித்துக்க்கொள்கிறேன்.
எனவே, அதிமுகவைப் போல, நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால், திமுக கொண்டுவந்த திட்டங்களில் எல்லாம் அவர்கள் எந்த அளவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் என்பதை நான் விளக்கமாக சொல்லி ஆக வேண்டும்.
உதாரணத்திற்கு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், 2008ம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய மகத்தான திட்டம். 1928 கோடி ரூபாய் செலவில் ஆகஸ்ட் 26, 2008ல் கலைஞர் அந்த திட்டத்தை துவக்கி வைத்தார். இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலின் அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், அன்றைக்கு ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனத்துடன் தொடர்ந்து பேசி, அன்று துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் ஜப்பானுக்கு சென்று சீரிய முயற்சிகளை மேற்கொண்டு அவர்களிடத்தில் இருந்து நிதி பெற்று அந்த திட்டத்தை தானே நேரடி கண்காணிப்பு செய்து அந்த திட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் நிறைவேற்றி 95 விழுக்காடு பணிகளை நிறைவேற்றி விட்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்து நாங்கள் விலகினோம். அதற்கு பிறகு, 2013ம் ஆண்டில் அவர்கள் 5 சதவீத பணியை மட்டும் பார்த்து, குழாயில் தண்ணீரை மட்டும் திறந்துவிட்டுவிட்டு, அந்த திட்டத்தை ஏதோ அதிமுக ஆட்சி ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டதை நாட்டு மக்கள் மறந்துவிட முடியாது.
கோயம்பேட்டில் இருக்கும் பேருந்து நிலையம் அனைவரும் அறிவார்கள். கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சீரும் சிறப்பாக உருவாக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை அதிமுக ஆட்சி வந்ததும் அந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்துவிட்டு அதில் இருந்த கலைஞர் பெயரை எடுத்துவிட்டு தங்கள் பெயரை போட்டுக்கொண்டு அதை ஏதோ அதிமுக ஆட்சிதான் உருவாக்கியதைப் போல நாடகமாடினார்கள்.
புதிய தலைமை செயலகம் கட்டிடம் கலைஞர் உருவாக்கிய கட்டிடம். அதில் ஓமந்தூரார் மருத்துவமனை என்று போட்டு ஏதோ உலகத்தில் பெரிய மருத்துவமனையை தாங்கள்தான் உருவாக்கியதைப் போல ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது அதிமுக ஆட்சி. இன்றைக்கு மருத்துவமனைகளைப் பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார்.
அவரிடம் நான் கேட்க விரும்புவது, 2011ம் ஆண்டிலே, தற்போது முதலமைச்சராக இருக்கிற மு.க.ஸ்டாலின் அன்றைக்கு துணை முதலமைச்சராக இருந்து நம்முடைய அரசின் சார்பாக தமிழ்நாட்டில் 10 அரசு கலைக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சார்பாக உறுப்புக் கல்லூரிகள் என்று அறிவித்தார்கள். அந்த 10 அரசு கலைக்கல்லூரிகளும் 2011ம் ஆண்டு அவர்கள் (அதிமுக) ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே திமுக அரசு அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கி எல்லா பணிகளையும் முடித்து வைத்தார்கள். ஆனால், அவர்கள் 2011ல் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த 10 அரசு கலைக்கல்லூரிகளும் ஏதோ அதிமுகவில் உருவாக்கப்பட்டதைப் போல அவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொண்டு அதை அதிமுக கொண்டுவந்ததாக நாடகமாடி அதன் மீது அதிமுக ஸ்டிக்கரை ஒட்டினார்களே. அதை இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அன்றைக்கு அமைச்சராக இருந்து அமர்ந்து பார்த்துகொண்டுதானே இருந்தார்.
நான் அவரிடம் கேட்க விரும்புவது, இந்த ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய கலாச்சாரம் என்பது உங்கள் ஆட்சியில் (அதிமுக) உங்களால் உருவாக்கப்பட்டது. இன்றைக்கு திறக்கக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் இருக்கக்கூடிய விருதுநகர் மருத்துவக் கல்லூரியும் 2011ம் ஆண்டு திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி என்பதையும் நான் அவருடைய கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். எனவே நான் தெரிவித்துக்கொள்ள விரும்புவது, நீங்கள் பெற்ற பிள்ளைகளை நீங்கள் பேணி பாதுகாத்திருக்க வேண்டும். நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பேரு வச்சீங்களே ஒழிய சோறு வச்சீங்களா என்றுதான் நான் அவர்களை கேட்க விரும்புகிறேன். எனவே, உங்களுடைய திட்டங்களில் எங்களுடைய புகழை வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு ஒருபோதும் இல்லை.
திமுக என்பது ஒரு பெரிய ஆலமரம். ஆனால், அதிமுக என்பது ஒரு காந்தாரி மணமாக இருக்கிறது என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். திமுகவின் சின்னமே உதயசூரியன், எனவே திமுக ஆட்சி, திமுக திட்டங்கள் என்பதெல்லாம் கோடி சூரியன், அதற்கு வெளிச்சம் வேறு இடத்தில் இருந்து தேவையில்லை. எனவே, திமுக கோடி சூரியன் ஒளிக்கு சமம். அதனுடைய ஒளி வேறு சில உதிரி நட்சத்திரங்களுக்கு தேவைப்படுமே தவிர, திமுகவுக்கும், திமுக அரசின் திட்டங்களுக்கும் வேறு எந்த விளம்பர வெளிச்சங்களோ, வேறு வெளிச்சமோ தேவையில்லை. எனவே, விதைக்கிற நேரத்திலே வெளியூருக்கு போய்விட்டு, அறுக்கிர நேரத்தில் நாங்கள்தான் இருக்கிறோம் என்று அருவாளைத் தூக்கிகொண்டு வருகிற இந்த செயலை அதிமுக கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.