Advertisment

ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனை சதி ஆலோசனை மண்டபமாக பயன்படுத்துகிறார் - தங்கம் தென்னரசு

'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது. ஆளுநர் எங்களுக்கு பிரச்சாரக் கருவி தான். இங்கே இருந்து அவரை மாற்றி விடக் கூடாது; தங்கம் தென்னரசு

author-image
WebDesk
New Update
Thangam Thennarasu Minister for Human Resources Management of Tamil Nadu

அமைச்சர் தங்கம்தென்னரசு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜ்பவனை சதி ஆலோசனை மண்டபமாக பயன்படுத்துவதாக தி.மு.க மூத்த தலைவரும், நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தீன்தயாள் உபாத்யாயா குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடம் பற்றிய பேச்சுகளை பிரிவினைவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: சென்னை டூ நெல்லை : வந்தே பாரத் ரயில் தொடங்கப்படாது: தெற்கு ரயில்வே முக்கிய விளக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக, அனைத்துச் செயல்களையும் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ’திருக்குறள்' மொழிபெயர்ப்பு சரியாக இருக்கிறதா, வள்ளலார் பாட்டு முறையாக இருக்கிறதா என்பதைப் பார்ப்பது முதல், ’சனாதனம்' குறித்த தனது ஆய்வை தினமும் செய்துகொண்டு வருகிறார்.

'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே அவருக்கு எரிகிறது. திராவிடத்துக்கு எதிரான தனது வன்மம் நிறைந்த வார்த்தைப் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். பா.ஜ.க.வின் முந்தைய தலைவர்களில் ஒருவரான தீன்தயாள் உபாத்தியாயாவின் நூலை வெளியிட்டு நேற்றைய தினம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கும் சென்று 'திராவிடம்' பற்றிய பேச்சு பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது' என்று பேசி இருக்கிறார். இப்படிச் சொல்லும் அவர், எந்த வகையில் பிரிவினையைப் பிரதிபலிக்கிறது என்று சொல்லி இருந்தால், விரிவாக விளக்கம் அளிக்கலாம். பொத்தாம் பொதுவாக, பிரிவினையை பிரதிபலிக்கிறது என்று அவர் சொல்வதைப் புலம்பலாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.

'திராவிடம்' என்ற சொல் ஒருகாலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக இருந்தது. இன்று அது ஒரு அரசியல் கோட்பாட்டின் பெயராக இருக்கிறது. இதனைத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருகிறார்கள். 'திராவிடம்' என்ற அரசியல் கோட்பாட்டு வடிவம் என்பது பண்டித அயோத்திதாசர், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் நடேசனார், டி.எம்.நாயர், தந்தை பெரியார், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், தமிழினத் தலைவர் கலைஞர் போன்றவர்களால் கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் கருத்தியல்’ ஆகும். 'சாதி பேதமற்ற திராவிடர்காள்' என்று அழைத்தவர் பண்டித அயோத்திதாசர். தமிழ் என்பதே அதனை உச்சரிக்க முடியாதவர்களால் ‘திரமிள’ எனத் திரிந்து அழைக்கப்பட்டது என்பது மொழியியல் அறிஞர்கள் கருத்து. எனவே தான் தமிழ் - திராவிடம் என்ற ஒரே பொருள் தரும் இருவேறு சொற்களாகப் பயன்படுத்தினார் தந்தை பெரியார்.

இத்தகைய திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள் என்பவை, சுயமரியாதை - சமூகநீதி - சமதர்மம் - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி - இந்தியக் கூட்டாட்சி ஆகும். இதனை உள்ளடக்கியது தான்' 'திராவிட மாடல்' ஆட்சியியல் கோட்பாடு ஆகும். தனது ஆட்சியின் நெறிமுறையாக இதனை வடித்துக் கொடுத்து செயல்படுத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். 'எல்லார்க்கும்' எல்லாம்' என்பதுதான் தனது இலக்காக முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள். இதில் பிரிவினை எங்கே இருக்கிறது?

‘திராவிட மாடல்’ ஆட்சியின் அனைத்து சட்டமும், திட்டமும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதே தவிர, யாரையும் வேறுபடுத்தி பாகுபடுத்தி பார்ப்பவை அல்ல. கோடிக்கணக்கானவர்களுக்கு - இலட்சக்கணக்கானவர்களுக்கு நன்மை தரும் திட்டங்களைத் தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் சூத்திரர்கள் என்ற கருதுகோளை விதைத்தது மனு நூல். அதன் 10-ஆவது அத்தியாயம் 44- ஆவது சூத்திரத்தில் தமிழகம் என்பது திராவிடம் என்றே அழைக்கப்படுகிறது. "பெளண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பரதம், பால்ஹீகம், சீனம், கிராதம், தநதம், கசம், இத்தேசங்களை யாண்டவர்களனைவரும்' மேற்சொன்னபடி சூத்திரராய்விட்டார்கள்" என்கிறது மனு. எது தமிழர்களைக் கொச்சைப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொல்லோ, அதனையே அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தியது திராவிட இயக்கம். இத்தகைய திராவிட இயக்கமானது கடந்த நூறு ஆண்டு காலமாக, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் மீட்சிக்கும் உணர்ச்சிக்கும் உயர்வுக்கும் அடித்தளம் அமைத்துவிட்டதே என்ற கோபத்தில் திராவிடம் என்ற சொல்லின் மீது தனது காழ்ப்புணர்ச்சியைக் காட்டி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அவருக்கு 'தமிழ்நாடு' என்ற சொல் பிடிக்கவில்லை. அதற்காக, தமிழ்நாடு என்ற மாநிலத்தின் பெயரை மாற்றிக் கொள்ள முடியாது. அவருக்கு 'திராவிட இயக்கம்' பிடிக்கவில்லை. அதற்காக திராவிடம் என்ற சொல்லை நாங்களும் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை. அடுத்து என்ன செய்யப் போகிறார்’ ஆளுநர்?

ஆளுநராக வந்தவர், இந்த மாநிலத்துக்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்திருக்கிறாரா என்றால், அதுவும் இல்லை. தினமும் ஏதாவது புலம்பிக் கொண்டு இங்குள்ள அரசியல் களத்தை குழப்ப முயற்சித்து வருகிறார். ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குக் குடைச்சல் ஏற்படுத்தி வருகிறார். சனாதன - வர்ணாசிரம சக்திகளுக்கான திண்ணைப் பிரச்சாரக் களமாக ஆளுநர் மாளிகையை மாற்றிக் கொண்டு வருகிறார். 'ஆளுநர்' பதவி - என்பது மாநில அரசு நிர்வாகத்தின் ஓர் அங்கம்’ என்பதை அரசுக்கு எதிரானவர்களோடு சேர்ந்து சதியாலோசனை மண்டபமாக, கிண்டி மாளிகையைப் பயன்படுத்தி வருகிறார். கடந்த அரைநூற்றாண்டாக அரசியல் களத்தில் இருந்து துடைத்தெறியப்பட்ட ஆரிய அரசியல் சக்திகள், தங்களது சாயம் போன சனாதனப் புத்தகங்களுக்கு ஆர்.என்.ரவியை வைத்து புதிய பொழிப்புரை எழுத வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயை அடையாளம் காணும் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். முத்தமிழறிஞர் கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள். ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எல்லாம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவரை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை என்பது தான் உண்மை.

ஆளுநர் எங்களுக்கு பிரச்சாரக் கருவி தான். இங்கே இருந்து அவரை மாற்றி விடக் கூடாது. அவர் இருந்தால் தான் நம்முடைய கொள்கைகளை நாம் வளர்க்க முடியும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்கள் மனதில் பட்டை தீட்டப்பட்ட வைரமாக மின்னுவதற்கு நாள்தோறும் தொண்டாற்றி வரும் ஆளுநர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Governor Rn Ravi Thangam Thennarasu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment