நாகர்கோவில், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தமிழக முதல்வர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரையாற்றினார். "இந்த ஆண்டு (2024) பிறந்து இரண்டு மாதங்கள் தான் முடிந்திருக்கிறது, ஆனால் பிரதமர் மாதத்திற்கு 4-வது முறை தமிழகத்திற்கு வருகிறார். இது எதற்கு?. உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு தரையில் குப்புற விழுந்து எத்தனை முறை புரண்டாலும், ஒட்டும் மண்தான் ஒட்டும். இந்த முறை ஒற்றை மண் கூட ஒட்டாது இது தான் தமிழகத்தில் அவர்களின் நிலை.
கன்னியாகுமரி ஒரு வரலாற்று பெருமை பெற்ற மாவட்டம். சமூக புரட்சியாளர் அய்யா வைகுண்டர், குமரி தந்தை மார்சல் நேசமணி,பொதுவுடமை களப்போராளி ஜூவானந்தம், தேசிய கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, திரைத்துறையில் ஒரு சாதனை சகாப்தம் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நாடக காவலர் ஐயா ஒளவை சண்முகம், திரை இசை திலகம் கே.வி. மகாதேவன், சமூக சிந்தனை கொண்ட பல எழுத்தாளர்களை கொண்டிருந்த பெருமை மிகுந்த மண் குமரி மண். இந்த மண்ணில் மட்டுமே விளையும் மட்டி, செவ்வாழை போன்ற பழங்களில் மருத்துவ குணம் மிகுந்தது.
ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் மோடி பிரித்தாளும் மன நிலையில், வட மாநிலங்களில் இந்தி பேசும் மாநிலங்களின் கண்களில் வெண்ணையும், தெற்கே உள்ள தமிழ் நாடு, கர்நாடகம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களின் கண்ணில் சுண்ணாம்பையும் தடவும் ஆட்சியாக மோடியின் ஆட்சி இருந்து கொண்டிருக்கிறது. மோடியின் அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி இந்தி என இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்க பார்கிறது. இதன் மூலம் ஜனநாயக ரீதியாக எதிர்க்கும் தி.மு.க போன்ற கட்சிகளை ஒற்றை தலைமை மூலம் அழித்து ஒழித்துவிட்டு ஏகபோக சக்கரவர்த்தியாக கோலோச்சலாம் என்று மோடி கனவு காண்கிறார்.
தமிழக வெள்ள சேதங்களுக்காக இதுவரை இரண்டு ரூபாய் கூட தரவில்லை பிரதமர் மோடி. தமிழகத்திற்கு மட்டும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறார். மோடி எத்தனை முறை வந்து சென்றாலும் தமிழக மக்கள் உங்களை நம்பமாட்டார்கள்" என்றார்.
நிகழ்ச்சிக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயரருமான மகேஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் பல்வேறு பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பொதுக் கூட்டம் காரணமாக அசிசி தேவாலாயம் பகுதி வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“