/indian-express-tamil/media/media_files/2025/10/22/thangam-thennarasu-virudhunagar-rain-relief-fund-2025-10-22-09-07-07.jpeg)
Thangam Thennarasu| Virudhunagar Rain Relief Fund
வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட தொடர் மழையில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (அக். 21) ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழையால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் மாவட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்; 19 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து 35 ஆடுகள் இறந்துள்ளன; அவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும். மேலும், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். பராமரிப்பைத் தாண்டி, வீடுகள் சீரமைக்கப்பட்டு வழங்கப்படும்," என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "நிவாரணம் வழங்குவது மட்டுமல்ல, உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே முதல்வரின் அறிவுரையாகும். அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அவற்றை திறக்கும் முன், கீழ்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மழைநீர் தேங்கும் இடங்களை நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் கண்டறிந்துள்ளனர். தற்போது 15 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன; அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.