க. சண்முகவடிவேல், திருச்சி
திமுக அரசின் சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் ஆவின் சேர்னும், அதிமுக மாணவரணி செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்கள் ஆன நிலையில் தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை நிறைவேற்ற வில்லை. குறிப்பாக மக்களுக்கு நன்மை செய்யாமல் சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தி இந்த அரசு மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி ஏழை, எளிய சாமானிய மக்களின் ஆட்சியாக இருந்து வந்தது.
கடந்த 10 ஆண்டுகளில் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்கு பிறகு மின் கட்டணம், சொத்து வரி குடிநீர் கட்டணம் போன்றவற்றை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுக்கும் அரசாக இருந்து வருகிறது.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் தமிழகம் மின் மிகை மாநிலமாக இருந்தது. ஆனால், மு.க. ஸ்டாலின் ஆட்சியில் மின் தட்டுப்பாடு உள்ள மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது.
பொதுமக்கள் திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று எண்ணி வாக்களித்த நிலையில் மக்களை ஏமாற்றும் வகையில் திமுக அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
என்றைக்குமே அதிமுக தேர்தல் வாக்குறுதிகளையும் அதற்கு மேலும் திட்டங்களை மக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அரசு. ஆனால் ஸ்டாலின் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் புதிதாக மக்கள் மீது சுமையை திணிக்கும் அரசாக உள்ளது.
எனவே, வருகின்ற பாராளுமன்றம், மற்றும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். இந்த ஆட்சி நடக்க கூடாது என்று மக்கள் விரும்புவதைப் போல திமுக காரர்களும் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க கூடாது என்று விரும்புகிறார்கள். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தான் வேண்டுமென்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக கொண்டுவர முயற்சி செய்தோம். ஆனால், ஓ. பன்னீர்செல்வம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் கலகத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். தலைமை கழகத்தில் புகுந்து ஜெயலலிதா எம்ஜிஆர் வாழ்ந்த இடத்தை அடித்து நொறுக்கினார். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆன்மா அடித்து நொறுக்கியவர்களை சும்மா விடாது.
மேலும், இதற்கு துணை போன திமுக அரசையும் சும்மா விடக்கூடாது வருகின்ற பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முதலமைச்சராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் ரத்தினவேல், எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஜாக்குலின், வனிதா, கே.சி. பரமசிவம் ,பத்மநாதன், வக்கீல் ராஜ்குமார், எம்ஜிஆர் இளைஞர் அணி முத்துக்குமார், இலியாஸ், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.