scorecardresearch

10 ஆண்டு பகை… என் குடும்பத்தை கருவறுக்க செந்தில் பாலாஜி சதி: தங்கமணி ஆவேசம்

என்னை ஒழிக்க வேணடும் என்பதற்காக செந்தில் பாலாஜி ரெய்டு நடத்தவைத்திருக்கிறார் என்றும் இது பத்தாண்டு பகை, அமைச்சர் செந்தில் பாலாஜி எனது குடும்பத்தைக் கருவறுக்கப் பார்க்கிறார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.

Former Minister Thangmani, Vigilance raid, Minister Senthil Balaji vengeance against my family Thangamani, ten years vengeance, 10 ஆண்டு பகை, என் குடும்பத்தை கருவறுக்க செந்தில் பாலாஜி சதி, தங்கமணி ஆவேசம், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, தங்கமணி வீட்டில் சோதனை, அதிமுக, அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக, AIADMK, DMK , Minister Senthil Balaji, Namakkal, raid at thangamani premises

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, பத்தாண்டு பகை, அமைச்சர் செந்தில் பாலாஜி என் குடும்பத்தைக் கருவறுக்கப் பார்க்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனைப் படலத்தை தொடர்ந்து வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி வரிசையில் ஐந்தாவது நபராக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்சஒழிப்புத் துறை போலீசார் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் புதன்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதவியில் இருந்த காலத்தில் முறைகேடு மூலமாக சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தங்கமணி, அவருடைய மனைவி மற்றும் மகன் தரணிதரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய பிறகு, இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ. 2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அறிக்கையில் தெரிவித்தனர். மேலும், அந்த அறிக்கையில், 1.13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, முக்கிய ஆவணங்கள், செல்போன்கள், வங்கி பாதுகாப்புப் பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் நாடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், என்னை ஒழிக்க வேணடும் என்பதற்காக செந்தில் பாலாஜி ரெய்டு நடத்தவைத்திருக்கிறார் என்றும் இந்த சோதனை பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாகவும் இது பத்தாண்டு பகை, அமைச்சர் செந்தில் பாலாஜி எனது குடும்பத்தைக் கருவறுக்கப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ அதிமுகவை அழிக்கும் நோக்கில் திமுக பழிவாங்கும் நோக்கில் இந்த சோதனையை திமுக நடத்தியுள்ளது. இந்த சந்திப்பின் மூலம் களங்கம் ஏற்படுத்தலாம் என்று அவர்கள் முயற்சிக்கிறார்கள். அதிமுகவை அழிக்கலாம் என்றும் அவர்கள் நினைப்பது ஒருநாளும் முடியாது. என்னிடம் பணம் கைப்பற்றியதாக வெளியான தகவல் அனைத்தும் பொய். என் செல்ஃபோனை மட்டுமே அவர்கள் வாங்கி சென்றுள்ளார்கள். பல செய்திகளில் எனது வீட்டில் ரூ.2.16 கோடி பணம் கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால், என் வீட்டிலிருந்து ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போகவில்லை. என்னுடைய செல்போனை மட்டும்தான் எடுத்துச் சென்றுள்ளனர். வேறு எதையும் என் வீட்டிலிருந்து எடுத்துப்போகவில்லை. தவறான தகவலைப் பரப்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் கரங்கள் வலுப்படக் கூடாது என்பதற்காக, இப்படி பொய் வழக்கு போட்டு எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.

இதற்கெல்லாம் நாங்கள் யாரும் அஞ்ச மாட்டோம். இந்தச் சோதனையின் உள்நோக்கம் என்னவென்றால், மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிற செந்தில் பாலாஜி, பொதுத்தேர்தலுக்கு மூன்று மாதத்திற்கு முன்பாக கரூரில் ஒரு துக்க நிகழ்ச்சிக்குச் செல்கிறார். க.பரமத்தி பகுதியில் நடந்த அந்த நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியப் பெருந்தலைவர் அங்கே சென்றிருக்கிறார். அவரைப் பார்த்து செந்தில் பாலாஜி, ‘இன்னும் மூணு மாசம்தான், திமுக ஆட்சிக்கு வந்ததும், நான்தான் மின்சாரத்துறை அமைச்சராவேன். அப்போது, தங்கமணியை மட்டுமல்ல, அவரின் குடும்பத்தையே கருவறுப்பேன். தங்கமணி, அவரின் மனைவி, மகன் மூணு பேரையும் கருவறுக்கப் போகிறேன் என்று பேசியிருக்கிறார். அதைப் பற்றி அப்போதே என்னிடம் சொன்னார்கள்.

2012-ம் ஆண்டு என்னுடைய மகன் திருமணத்துக்கு செந்தில் பாலாஜி வீட்டுக்கு, அவரிடம் போன் மூலம் கேட்டுவிட்டு, எனது மனைவியோடு பத்திரிகை வைக்கப் போனேன். ஆனால், எங்களை ஒரு மணி நேரம் காக்கவைத்துவிட்டு, பின்வாசல் வழியாகப் சென்றுவிட்டார். அதன்பிறகு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரின் சுயரூபம் தெரிந்து, செந்தில் பாலாஜி வகித்த பதவியைப் பறித்து எனக்கு வழங்கினார். அதன் பிறகு, அவருக்கு ஐந்து ஆண்டுக்காலத்துக்கு எந்தப் பதவியையும் கொடுக்கவில்லை. அதனால், எந்தெந்தக் கட்சிக்கு அவர் போனார் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தக் கோபத்தையெல்லாம், இப்போது திமுக தலைமையிடம் சொல்லி, என் சம்பந்தப்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தவைத்து, பழிவாங்கி தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறார். ஆனால், அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் சட்டத்தை நம்புபவன். என் மகன் நேர்மையாகத் தொழில் செய்கிறார். சரியாக கணக்குகளை வைத்திருக்கிறார். அதனால், நீதிமன்றத்தில் இதைச் சந்தித்துக்கொள்வேன்.

என்னை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, செந்தில் பாலாஜி ரெய்டு நடத்த வைத்திருக்கிறார். ஆயிரம் செந்தில் பாலாஜிகள் வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது. செந்தில் பாலாஜியின் முழு சுயரூபம் இன்னும் திமுக தலைமைக்குத் தெரியவில்லை. குறிப்பாக, முதலமைச்சருக்குத் தெரியவில்லை. கூடியவிரைவில் செந்தில் பாலாஜியின் சுயரூபம் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரியவரும்.

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்த வைத்திருக்கிறார்கள். இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையால், நானும் கழகமும் ஒழிந்துவிட மாட்டோம். அதற்கு மாறாக நாங்கள் இன்னும் எழுச்சி அடைவோம்” என்று ஆவேசமாகக் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thangmani says vigilance raid because of minister senthil balaji vengeance against my family