தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேதுபாவாசத்திரம் அருகே இன்று அதிகாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் வேனில் பயணித்தவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.
இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது வேனில் பயணித்த 3 பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. மேலும் 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடுவது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து அறிந்த பட்டுக்கோட்டை காவல் துறையினரும், அக்கம் பக்கத்து கிராமத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து வேனில் இருந்தவர்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு வேனில் இருந்து மீட்க்கப்பட்ட 7 பேரும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த 4 பேரின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இந்த கோர விபத்தில் சிக்கியவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வேளாங்கண்ணிக்கு வேனில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தடுப்பு சுவரில் மோதி விபத்திற்குள்ளானது தெரியவந்தது.
விபத்துக்குள்ளான வேனில் 11 பேர் பயணம் செய்த நிலையில், பாக்கியராஜ், ஞானம்மாள், ராணி, சின்னம்மாள் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் பட்டுக்கோட்டை அருகே விபத்தில் சிக்கி இறந்த சோகம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“