உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே பக்தர்களின் வசதிக்காக தஞ்சாவூருக்கு அண்டை மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
1000 அண்டுகளுக்கு மேல் பழமையான தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகிற 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கில் பக்தர்கள் தஞ்சாவூரை நோக்கி வருகின்றனர். இதனால், தஞ்சையில் மக்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது.
குடமுழுக்கு விழாவுக்காக பக்தர்கள் ஆயிரக் கணக்கில் வருவதால் பேருந்துகளில் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதனால், தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, பிப்ரவரி 4 முதல் மூன்று நாட்களுக்கு தெற்கு ரயில்வே நான்கு சிறப்பு பயணிகள் ரயில்களை இயக்கவுள்ளது என்று அறிவித்துள்ளது.
அதன்படி, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் இருந்து - தஞ்சாவூருக்கு இயக்கப்படும் ரயில்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி -தஞ்சாவூர் இடையே பிப்ரவரி 4, 5, 6 தேதிகளில் மதியம் 12.10 மணிக்கு டீசல் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் (டிஇஎம்யு) சிறப்பு ரயில் ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு மதியம் 1.30 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
தஞ்சாவூர்-திருச்சி டிஇஎம்யு சிறப்பு ரயில் மதியம் 2 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
தஞ்சாவூர்-மயிலாடுதுறை சிறப்பு ரயில் காலை 9.45 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு மதியம் மயிலாடுதுறை சென்றடையும்.
மயிலாடுதுறை - தஞ்சாவூர் சிறப்பு ரயில் மதியம் 3.20 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
தஞ்சாவூர்-திருவாரூர் டிஇஎம்யு சிறப்பு ரயில் இரவு 9.55 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருவாரூர் சென்றடையும்.
திருவாரூர்-தஞ்சாவூர் டிஇஎம்யு சிறப்பு ரயில் திருவாரூரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.45 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
காரைக்கால்-தஞ்சாவூர் டிஇஎம்யு சிறப்பு ரயில் காரைக்காலில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.
தஞ்சாவூர்-காரைக்கால் டிஇஎம்யு சிறப்பு ரயில் மதியம் 2 மணிக்கு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு காரைக்காலை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படும்.
அதே போல, தமிமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) பிப்ரவரி 3 முதல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தஞ்சாவூருக்கு 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பெரிய கோயிலுக்குச் சென்று, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வசதியாக மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மேற்கொண்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.