Advertisment

புரட்டிப் போட்ட கொரோனா; மொய்த்த முதலீட்டாளர்கள்; தஞ்சை பஸ் அதிபர் கைது!

வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கொரோனா! முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தர முடியாததால், தஞ்சையில் பிரபல பஸ் நிறுவன அதிபர் கைது!

author-image
WebDesk
May 16, 2022 21:58 IST
New Update
புரட்டிப் போட்ட கொரோனா; மொய்த்த முதலீட்டாளர்கள்; தஞ்சை பஸ் அதிபர் கைது!

Thanjavur Bus owner arrested for fraud case: வாக்குறுதி கொடுத்தபடி மாதாந்திர பங்குத் தொகை வழங்காமல் 417 முதலீட்டாளர்களை ரூ.8 கோடி அளவுக்கு ஏமாற்றியதாக ‘ஹமத் டிரான்ஸ்போர்ட்’ என்ற பிரபல தனியார் பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

‘ஹமத் டிரான்ஸ்போர்ட்’ நிறுவனத்தில் ரூ.8 லட்சம் முதலீடு செய்திருந்த ராஜகிரியைச் சேர்ந்த பைரோஜ்நிஷா என்ற முதலீட்டாளர் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அதன் உரிமையாளர் முஸ்தபா (39) என்பவரை கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த முகமது ஹனீபா என்பவரது மகன் முஸ்தபா (39). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.200 கோடி முதலீடு செய்து ‘ஹமத் டிரான்ஸ்போர்ட்’ என்ற தனியார் பேருந்து நிறுவனம் தொடங்கி 20 பேருந்துகள் இயக்கி வந்தார்.

இதில் அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவடை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 700 நபர்கள் முதலீடு செய்திருந்தனர். பேருந்துகள் இயக்குவதில் கிடைக்கும் மொத்த லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் பங்குதாரர்களுக்கு கொடுப்பதாக முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் அளித்து அதனடிப்படையில் அவர்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக 2020, 2021 ஆகிய 2 ஆண்டுகள் லாக்டவுன் காரணமாக பேருந்துகள் இயக்கப்படாததால் ஹமத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு வருமான பாதிப்பு எற்பட்டது. அதனால் அவர் ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் லாபத்திற்கான பங்குத் தொகை கொடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பங்குத் தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைத் திருப்பித் தருமாறு கேட்டு, ‘ஹமத் டிரான்ஸ்போர்ட்’ நிறுவன அதிபர் முஸ்தபாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

இதனால் வேறு வழியின்றி 16 பேருந்துகளை விற்று அப்பணத்தை பாதி எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார். ஆனால் இன்னும் 417 நபர்களுக்கு ரூ.8 கோடி கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது அவரிடம் வெறும் 4 பேருந்துகள் மட்டுமே உள்ளன என்கின்றனர் போலீஸார். பாதிக்கப்பட்ட நபர்கள் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் அவர் துபாய்க்கு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பிய அவர் மே 14-ம் தேதி (சனிக்கிழமை) இரவு தனது குடும்பத்தினருடன் காரில் சுற்றுலா செல்ல முயன்றபோது அதுபற்றிய தகவல் கிடைத்த அதே பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்து அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஹமத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கடந்த 2020 பிப்ரவரி மாதம் ரூ.8 லட்சம் முதலீடு செய்திருந்ததாகவும், அந்நிறுவனம் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் மட்டும் தலா ரூ.12, 500 வீதம் லாபத்தில் பங்குத் தொகை கொடுத்ததாகவும், அதன் பின்னர் இத்தனை மாதங்களாக எந்தவொரு பணமும் தரவில்லை என்றும், தனது முதலீட்டைத் திருப்பிக் கேட்டபோது, அதை முஸ்தபா தராமல் ஏமாற்றிவிட்டதாக ராஜகிரியைச் சேர்ந்த பைரோஜ்நிஷா என்ற பாதிக்கப்பட்ட பெண் முதலீட்டாளர் புகார் அளித்தார்.

அவரது புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ‘ஹமத் டிரான்ஸ்போர்ட்’ உரிமையாளர் முஸ்தபாவை ஞாயிற்றுக்கிழமை (மே 15) கைது செய்தனர். இதையடுத்து அவர் அன்று மாலை 7.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படியுங்கள்: கூப்பிய கரங்களில் கூர்வாள்… தங்கம் தென்னரசு- அண்ணாமலை மோதல்!

இந்நிலையில், இந் நிறுவனத்தில் ரூ.8 லட்சம் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட ராஜகிரியைச் சேர்ந்த பாரூக் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ள முஸ்தபா முதலீட்டாளர்களை திட்டமிட்டு ஏமாற்றியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“கொரோனா லாக்டவுன் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டு கிடைக்காமல் நஷ்மடைந்து விட்டதாக முஸ்தபா சொல்வது பொய். நாங்கள் முதலீடு செய்த தொகையைக் கொண்டு முஸ்தபா துபாயில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அதேபோல தனது மாமனார், மைத்துனர் போன்ற நெருங்கிய உறவினர்கள் பெயரில் அண்மையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் வாங்கியிருக்கிறார்,” எனக் குற்றஞ்சாட்டுகிறார் பாரூக்.

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu #Thanjavur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment