contact with a high voltage electric wire during a chariot procession in Thanjavur district தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை நடைபெறும். தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது.
அதிகாலை 3 மணியளவில் தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நான்கு பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது
இந்நிலையில், மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
தேரினை இழுத்து வரும் போது அப்பகுதியில் தண்ணீர் இருந்ததால் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தேரினை விட்டு தள்ளி நின்றதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்படதாக கூறப்படுகிறது.
மேலும், களிமேட்டில் தேர் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தஞ்சையில் நடந்த தேர் விபத்து குறித்து பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், மக்களுடன் எப்போதும் இருப்பேன் சம்பவம் குறித்து அறிந்ததும், மீட்பு பணிகளை உடனடியாக செய்ய உத்தரவிட்டேன் என கூறியுள்ளார்.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க அறிவுறுத்தி உள்ளேன்: விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள ஐஏஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் வருவாய் துறை முதன்மை செயலாளர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் கூறியுள்ளார்
தஞ்சை, களிமேடு பகுதியில் தேரில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மின்சாரம் தாக்கி காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார்.
காயமடைந்தவர்களின் குடும்பத்தினரிடம் சிகிச்சை குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.
தஞ்சை, களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதன்பின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கினார்
தஞ்சை, களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி வருகிறார்
தமிழ் திரை உலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு 'கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என சட்டப்பேரவையில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்
அயோத்தியா மண்டபத்தை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையில் தக்காரை நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக, ஸ்ரீராம் சமாஜம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
தஞ்சை, களிமேடு தேரோட்டத்தின்போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக அதிமுக நிர்வாகி சஜீவனிடம் இன்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஐஜி சுதாகர் தலைமையில் 2வது நாளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று பங்களாவில் வடிவமைக்கப்பட்ட லாக்கர் அறைகள் குறித்து சஜீவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. தீ விபத்து நடந்த நியூரோ பிரிவில் உள்ள நோயாளிகள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
தமிழகத்தை உலுக்கிய தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
தஞ்சையில் ஒரு விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை தேர் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் தெரிவித்தார்.
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ. 2 லட்சம் மற்றும் காயமடைந்த 14 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சை தேர் விபத்தில் அப்பாவி மக்கள் இறந்ததை வைத்து அரசியல் செய்ய நினைக்க வேண்டாம். அதிமுகவினரின் செயல் நியாயமா என்பதை சபை உறுப்பினர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன் – சபாநாயகர் அப்பாவு
தஞ்சை தேர் விபத்து குறித்து விசாரிக்க வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைப்பு- சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
தஞ்சை தேர் விபத்து குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் அமர்ந்து அதிமுக உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
சட்டப்பேரவையில் தஞ்சை தேர் விபத்து குறித்து அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என அதிமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோர் குறித்து அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” -உள்துறை அமைச்சர் அமித் ஷா
தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் தலா ரூ. 1 லட்சம் நிவாரணம், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள 15 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் நிவாரணம் அளித்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.
தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற தஞ்சை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்ல உள்ளார்!
தஞ்சாவூர் தேர் ஊர்வலத்தின்போது ஏற்பட்ட விபத்து வேதனையளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என தமிழ்நாடு ஆளுநர் ஆன் என் ரவி தெரிவித்துள்ளார்.
களிமேடு தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தைத் தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கூடுகைகளில் விழா ஏற்பாட்டாளர்களுடன் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியோர் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாதுகாப்பான விழாக்களுக்கான நெறிமுறைகள் உறுதியாக கடைப்பிடிக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
தஞ்சை களிமேடு பகுதி தேர் திருவிழாவில் அலங்கார சப்பரத்தில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்ட போது மின்சாரம் தாக்கிய கொடூர விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பது பெருந்துயரம். உறவினர்களை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்ததற்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருஞ்சோகம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தேர் விபத்து குறித்து தகவல் தெரிந்தவுடன் துரித நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருகிறது.தேர் விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சை தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல். மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என ட்வீட் செய்துள்ளார். தேர்பவனி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை களிமேடு அப்பர் கோயில் தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்.இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்
தேர் திருவிழா விபத்து நடந்த இடத்தில் மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் விசாரணை. முன்னதாக ஆட்சியர் தினேஷ் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த நிலையில், ஐ.ஜியும் ஆய்வு மேற்கொள்கிறார்.
தேர்பவனி விபத்தில் 11 பேர் உயிரிழந்த துயர செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தஞ்சை தேர்பவனியில் காயமடைந்துள்ள 15 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தேர் விபத்து நடந்த தஞ்சை களிமேடு பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார்.
மோகன்(22), பிரதாப் (36), ராகவன் (24), அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13)
தேரை வளைவில் திருப்பும்போது தேருடன் இருந்த ஜெனரேட்டர் சிக்கியுள்ளது. ஜெனரேட்டரை சரிசெய்யும்போது தேரின் உச்சி அருகில் இருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டதாக தஞ்சா மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா தகவல்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 9 மணிக்கு விமானம் மூலம் தஞ்சாவூர் செல்கிறார். களிமேடு தேர்பவனியில் விபத்து நிகழ்ந்த நிலையில் அமைச்சர் தஞ்சை விரைகிறார்
தஞ்சை களிமேடு தேர்பவனி விபத்து குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு கொண்டுவர உள்ளோம் என திருவையாறு எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன் தகவல்