/indian-express-tamil/media/media_files/2024/10/17/tTWGjoRYklv6Kc7MDD8B.jpg)
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நலனில் தனி கவனம் செலுத்தி மீட்டு வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மனநல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து மறுவாழ்வு கிடைப்பதற்கான ஏற்பாட்டை அக்கறையுடன் முன்னெடுத்து வருகிறார். தான் அலுவல் ரீதியாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்கின்றபோது சாலையில் பார்க்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டு கலங்குகிறார். உடனே சம்பந்தப்பட்ட துறை மூலமாக அவர்களை மீட்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதுவரை 10-க்கும் மேற்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு பூதலூர் தாலுகாவில் ஆய்வு பணி மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா. அப்போது பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் உள்ள புதுப்பட்டியில் 40 வயதுமிக்க நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். உடனே காரை நிறுத்தச் சொல்லி அவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால், அந்த நபர் பேசும் நிலையில் இல்லை. இதையடுத்து வாழ வேண்டிய வயசில் வீட்டை விட்டுட்டு சாலையில் திரிகிற அளவுக்கு என்ன பிரச்சனையோ என கலங்கினார்.
அத்துடன் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி உதவியுடன் அந்த நபரை மீட்டு தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் இயங்கி வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்த்தார். மேலும் இவருக்கு உரிய சிகிச்சை கொடுத்தால் மீண்டும் வந்திடுவார்னு தோணுதுனு சொல்லியிருக்கிறார். மீட்பு மையத்தில் அலுவலர்களும் அந்த நபருக்கு வேண்டிய சிகிச்சையை கொடுத்துள்ளனர். தனக்கு இருக்கும் பிஸியான வேலைக்கு நடுவில் அவ்வப்போது அந்த நபர் குறித்து விசாரித்துள்ளார். இந்தநிலையில் அந்த நபர் மனநிலை சரியாகி மீண்டு வந்துள்ளார்.
இதையடுத்து அவர் எந்த ஊர் என்கிற விபரத்தை கேட்க சொல்ல அந்த நபர் தான் குறித்தவற்றை சொல்லியிருக்கிறார். இதில் அவரது பெயர் குஜல்லா பிரசாத், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், அம்மாவாரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதை போலீஸார் மூலமாகவும் உறுதி செய்யப்பட்டது. பின்னர் குஜல்லா பிரசாத்திடம் மாவட்ட ஆட்சியர் பேசியதில், 13 வருடங்களுக்கு முன்பே வீட்டை விட்டு வந்துட்டேன், சாலைகள் செல்லும் தூரம் நடப்பேன். சோறு கிடைக்குற இடத்தில் சாப்பிட்டு விட்டு பஸ் ஸ்டாப் உள்ளிட்ட தெருவோரங்களில் என் வாழ்க்கை ஓடி விட்டது.
இனி என் வீட்டுக்கு செல்ல முடியுமானு தெரியலை, என்னோட அப்பா நமஞ்சி நெய்லூ, அம்மா நூரசம்மாவை பாக்கணும் அவங்களோட சேர்ந்து மிச்சமிருக்கிற வாழ்க்கையை வாழணும் என்று கலங்கியிருக்கிறார். கவலைபடாத நான் உன்னை அப்பா, அம்மாக்கிட்ட சேர்த்து வைக்கிறேனு சொன்ன ஆட்சியர் அதற்கான முன்னெடுப்புகளை உடனே ஆரம்பித்தார். பின்னர் பெற்றோர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க செய்து போனில் அவர்களிடம் பேசியிருக்கிறார். தன் புள்ளை இருக்கானா, இல்லையா என்ன ஆனான் என எதுவும் தெரியாம 13 வருஷமா துடிச்சிக்கிட்டிருந்தோமுனு கதறியவர்கள் உடனே தஞ்சாவூருக்கு புறப்பட்டனர்.
இதையடுத்து நேற்று தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் குஜல்லா பிரசாத்தை பெற்றோரிடத்தில் ஒப்படைத்தார் ஆட்சியர் பிரியங்கா. மகனை பார்த்ததும் பெற்றோர். தாவியணைத்து கட்டிக்கொள்ள அங்கிருந்த அனைவரது கண்களிலும் ஆனந்த கண்ணீர். இத்தனை வருடங்களுக்கு பிறகு மகனை எங்களிடம் சேர்த்த ஆட்சியரை கையெடுத்து கும்பிட்டனர். நீங்க நல்லா இருக்கணும் சாமி, தாயினு உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சியரிடம் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொலைந்த என் வாழ்க்கை உங்க மூலம் திரும்ப கிடைச்சிருக்குனு ஆட்சியரிடம் கண்ணீரில் நன்றி சொன்ன குஜல்லாவிடம், எதற்கும் கலங்கிடாம வலிமையோடு மகிழ்ச்சியாக மிச்சமிருக்குற வாழ்க்கையை வாழணும் என இனிப்பு, புது ட்ரெஸ் கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தார் ஆட்சியர் பிரியங்கா. இதைகேட்ட பலரும் சினிமாவில் வர்ற மாதிரி இருக்குனு 13 வருஷத்துக்கு பிறகு மகனை பெற்றோர்க்கிட்ட ஒப்படைத்த ஆட்சியரின் செயலை நினைத்து நெகிழ்ந்தனர்.
இது குறித்து பேசிய சிலர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பதை கடமையாக இல்லாமல் அக்கறையாக செய்கிறார் கலெக்டர். இரண்டு மாதத்திற்கு முன்பு அய்யம்பேட்டையில் உள்ள மனநல காப்பகத்தில் ஆய்வுக்கு சென்றவர் அங்கிருந்த அணில் யாதவ் என்கிற வயது 28 இளைஞரை பார்த்தார். நன்றாக பேசும் நிலையில் இருந்த அவரிடம் எந்த ஊர் என்ற தகவல்களை கேட்டிருக்கிறார். மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள மிட்வாசா கிராமத்தை சேர்ந்தவர் என்பதை சொல்லியிருக்கிறார். உடனே அணில் யாதவின் பெற்றோருடன் போனில் நேரடியாக ஆட்சியரே பேசியதை தொடர்ந்து பெற்றோர் வந்து அவரை அழைத்து சென்றனர்.
சில சூழல்களை எதிர் கொள்ள முடியாமல் திசை மாறி சென்ற இது போன்ற நபர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க செய்வது எளிய மக்கள் மீது அவர் அவைத்திருக்கும் அன்பை காட்டுகிறது. இதுவரை சாலையில் சுற்றித்திரிந்த பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க செய்திருக்கிறார். இதில் 13 வருடங்களுக்கு பிறகு மகனை பொற்றோருடன் சேர்த்து வைக்க அவர் எடுத்த முயற்சி காலத்துக்கும் ஆட்சியரின் பெயரை சொல்லும்.
இதற்கு நான் மட்டும் காரணமல்ல, எனக்கு பின்னால் இருந்து உழைத்த டீமால் தான் இது சாத்தியமானது என எல்லோரையும் பாராட்டி உற்சாகப்படுத்தியதில் அவரின் பெருந்தன்மையும் அடங்கும் என்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.