க.சண்முகவடிவேல்
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ஜூன் 16-ம் தேதி கல்லணை தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து கல்லணையில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கல்லணையில் உள்ள பாலங்கள் அனைத்தும் வண்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கல்லணை பாலங்களின் மேல் உள்ள மாமன்னன் கரிகாலன் சிலை உள்ளிட்ட சிலைகளுக்கும் வர்ணம் பூசும் பணி தொடங்கி உள்ளது.
மேட்டூர் அணை தண்ணீரை எதிர்நோக்கி கல்லணையில் அனைத்து பணிகளும் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இது தவிர கொள்ளிடம் ஆற்றில் ஷட்டர்கள் ஏற்றி இறக்கும் மின்மோட்டார்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் புதிய ஷட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல தோகூர் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள வடிகால் பாலத்தினை அகலப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி குடமுருட்டி ஆற்றின் தலைப்பில் காவிரி ஆற்றில் நீரொழுங்கி அமைக்கும் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டையில் கல்லணைக் கால்வாயில் சீரமைப்பு பணி, ஆலக்கு டியில் முதலை முத்துவாரி, திருச்சென்னம்பூ ண்டியில் கோவிலடி வாய்க்கால், மாரனேரி, விசலூா் படுகை ஆனந்தகா வேரி வாய்க்கால், கண்டமங்கலம் வாய்க்கால் ஆகியவற்றில் தூா்வாரும் பணி, கல்லணையில் புனரமைப்பு பணி, திருக்காட்டுப்பள்ளி காவிரியில் படுகை அணை கட்டுமானப் பணி ஆகியவற்றை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார்.
அதேபோல், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மேட்டுத்தெருவில் காவிரியிலிருந்து அரசலாறு பிரிகின்றது. இந்த காவிரி ஆற்றின் மூலம் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கரும், அரசலாறு மூலம் 84 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்த காவிரி-அரசலாறு பிரியும் அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பல்வேறு பணிகளுக்காக பொதுப்பணித்துறை மூலம் நீட்டித்தல், விரிவாக்குதல், புணரமைப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தற்போது அந்தப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது.
இந்த நிதியின் ஒரு பகுதியில் காவிரி-அரசலாறு பிரியும் பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவதற்கான கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினையும் ஆய்வு செய்தார். அதேபோல் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூரில் தூர்வாரப்பட்டு வரும் வாய்க்காலையும் பார்வையிட்ட அவர், இந்த வாய்க்காலில் மீதமுள்ள 800 மீட்டரையும் தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள், ஏரிகள் ஆகியவற்றில் 1,068.45 கி.மீ. தொலைவுக்கு ரூ.20.45 கோடியில் தூா்வாரும் பணி நடைபெற்று வருகின்றது என்பதும், மொத்தமுள்ள 189 பணிகளில் இதுவரை 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.