தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் 19-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கின்றது. முடிவுகள் ஜூன் மாதம் 4-ம் தேதி வெளிவரவிருக்கின்றன. அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் வெயிலிலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அனல் பறக்க கருத்து மோதல்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தைப்பொறுத்தவரை 4 முனைப்போட்டி என்று சொல்லப்பட்டாலும், இருமுனைப்போட்டி என்பதை களம் சொல்கின்றது. நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும், தமிழக ஆளும் கட்சியான தி.மு.க-வை தமிழகத்தின் எதிர்கட்சியான அ.தி.மு.க-வும், மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும், நாம் தமிழர் கட்சியினரும் கடுமையாக விமர்சித்து தி.மு.க. எதிர்ப்பு என்பதில் மட்டும் மூன்று கட்சியினரும் உறுதியான நிலையை எடுத்திருக்கின்றனர். மூவரும், நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் என்பதை மறந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்ப்பதை விட, தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வை எதிர்ப்பதற்கே தங்களது பிரச்சார வியூகத்தை வகுத்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தின் பண்பாட்டுப் பதிவுகளைத் தாங்கி நிற்கும் அடையாளங்களில் ஒன்று தஞ்சாவூர். சமையல் தொடங்கி, இயல், இசை, நாடகம் என முத்திரைப் பதித்த மண் தஞ்சை மண். கலைகள் செழித்தோங்கி வளர்ந்த தஞ்சை தமிழகத்தின் செழுமையான கலாச்சாரத்தைத் தாங்கி நிற்கிறது. பிற்கால சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சை ராஜராஜ சோழனையும், ராஜேந்திர சோழனையும் தந்த பூமி. இங்கு நிரம்பி இருக்கும் கோயில்கள் தமிழர்களின் கட்டிடக் கலைக்குச் சான்றாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
தஞ்சை பெரிய கோயிலும், திருவையாறு ஆராதனை விழாவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியுமே தனித்தனி அடையாளத்தைக் கொண்டதாக விளங்குகிறது.
காவிரி டெல்டா பகுதியைக் கொண்ட இந்தத் தொகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாக இருக்கிறது. காவிரி தண்ணீர்க்காக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை அதிகமாகக் கொண்ட பகுதி இது. 'உலகுக்குச் சோறு வழங்கிய சோழ வளநாடு' தற்போது விவசாயம் செய்ய காவிரி தண்ணீருக்காகப் போராடி வருகிறது.
அரசியல் ரீதியாகவும் தஞ்சை தனி அடையாளத்தைக் கொண்டது. தமிழகத்தில் தி.மு.க வலிமையடைந்த பிறகு அதற்கு வலிமை சேர்க்கும் முக்கிய பகுதியாக தஞ்சை விளங்கி வந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்த தஞ்சை தொகுதி தற்போது தி.மு.க-வின் பிடியில் இருக்கின்றது. தி.மு.க-வின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம் 6 முறை வென்ற தொகுதி இது. தி.மு.க-வுக்கு வலிமையான வாக்கு வங்கி இருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சியே நேரடியாகக் களம் கண்டுள்ளது.
அதேசமயம் அ.தி.மு.க பொறுத்தவரையில் பலமுறை இந்தத் தொகுதி கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கியுள்ளது. 1977-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் வென்ற அதிமுக, பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2014-ம் ஆண்டு வென்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிகள் அடங்குகின்றன. தஞ்சாவூர் தொகுதி மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,94,216 ஆகும். ஆண் வாக்காளர்கள் 7,23,787 பேரும், பெண் வாக்காளர்கள் 7,70,300பேரும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 129 பேரும் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருக்கின்றனர்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க 7 முறையும், அ.தி.மு.க 2 முறையும் காங்கிரஸ் 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஐந்தில் தி.மு.க.வும், ஒன்றில் ஓ.பி.எஸ்., ஆதரவாளரான ஆர்.வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.
இங்கு தி.மு.க சார்பில் ச.முரசொலி, அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க வேட்பாளராக பி.சிவநேசன், பா.ஜ.க சார்பில் கருப்பு எம்.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஹிமாயூன் கபீர் என மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பிரதான 4 கட்சிகளிடையே தான் போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் தீவிரமாக சுழன்று தேர்தல் பணியாற்றி வருகிறார். பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் வாக்காளர்களை கவரும் விதமாக கும்மியடிப்பது, கோலம் போடுவது, கடைகளில் டீ போட்டுத் தருவது என பல்வேறு பிரச்சார யுக்திகளை கையாண்டு வருகிறார். முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் அதிமுகவினரும் களத்தில் குதித்து ஆதரவு திரட்டி வருவதும், எடப்பாடி பழனிசாமி சிவநேசனுக்கு 2 முறை தேர்தல் பிரச்சாரம் செய்ததும், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பிரச்சார பலமும் சிவநேசனுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கின்றது.
பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கருப்பு எம்.முருகானந்தம் 2014 தேர்தலில் தவற விட்ட வெற்றி வாய்ப்பை இந்த முறை பெற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஆதரவாக அ.ம.மு.க-வினர் மற்றும் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோரும் களம் இறங்கி பிரச்சாரம் செய்தது அவருக்கு கொஞ்சம் தெம்பைக் கொடுத்திருக்கின்றது.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு செய்த திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளின் பட்டியல்களை கையில் வைத்துக் கொண்டு, அதற்காக ஒரு தனி டீம் செயல்பட்டு பாஜகவுக்கு ஆதரவை திரட்டி வந்தாலும் தஞ்சையில் பா.ஜ.க டெப்பாசிட் வாங்க போராடிக்கொண்டிருக்கின்றது.
இந்த முறை பழனிமாணிக்கத்துக்குப் பதிலாக புதுமுகமான வழக்கறிஞர் ‘தென்னங்குடி’ முரசொலி நிறுத்தப்பட்டுள்ளார். பழனிமாணிக்கத்திற்கு பொதுமக்களிடம் அதிருப்தி இல்லை என்றாலும், கட்சிக்குள் ஏகப்பட்ட உட்கட்சி பூசல் இருந்த காரணத்தாலேயே தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த புதுமுகம் முரசொலி நிறுத்தப்பட்டுள்ளார். பல தலைமுறையாக தி.மு.க. குடும்பம் என்பதும், வேட்பாளர் அறிவிப்பின்போதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் தஞ்சையில் முரசொலியே நிற்கின்றது பார்த்துக்கொள்ளுங்கள் எனப்பேசியது கூடுதல் பலமாக இவருக்கு அமைந்திருக்கின்றது.
முரசொலிக்கு ஆதரவாக எஸ்.எஸ். பழநிமாணிக்கம் எம்.பி. , எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை, நா.அசோக்குமார், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பட்டுக்கோட்டை- தஞ்சாவூர்- அரியலூர் ரயில் புதிய வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தஞ்சாவூர் தொகுதியில் கொண்டு வர திமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், விசிக மற்றும் விவசாய சங்கங்களும் இவருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வருவதாலும், திமுகவின் நலத்திட்டங்கள் கைக்கொடுக்கும் என்பதாலும், மற்ற வேட்பாளர்களை முந்தி உதயசூரியன் தஞ்சையில் பிரகாசமாக உதிக்கும் என்பதில் ஐயமில்லை.
இருமுறை சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட அனுபவங்களை பாடங்களாக கொண்டு, தற்போது இளைஞர்கள் மத்தியில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயூன் கபீர். இந்த முறை மைக் சின்னத்தில் போட்டியிடும் இவர், நீர் மேலாண்மை, விவசாய விளைப் பொருட்கள் சேமிப்பு கிடங்குகள் போன்ற பிரதான திட்டங்களை பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி மாற்றம் விரும்பும் மக்களின் மத்தியில் வேகமாக பரவி வருகின்றார் என்றாலும் சூரியனின் அனலில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்.
இவர்கள் மட்டுமில்லாமல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயி என்.செந்தில்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு, விவசாயிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இவருக்கு ஆதரவாக அச்சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் காவிரி பிரச்சினை, மேகேதாட்டு விவகாரம் போன்ற பிரச்சினைகளை எடுத்துக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
நெற்களஞ்சியமான தஞ்சையில் தொடர்ந்து காவிரி நீர் பிரச்சனை தீர்க்கப்படாமலேயே தொடர்வதும், தற்போது மேகதாது பிரச்சனை வேகமெடுத்திருப்பதால், வரும்காலங்களில் காவிரியில் தண்ணீர் கானல் நீராகிவிடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கும் நிலையில் காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் சுமூக முடிவெடுக்க வேண்டும் என்ற ஒட்டுமொத்த கோரிக்கை வலுத்திருக்கின்றது.
அதேபோல், முழுமையான வேளாண் மண்டலமாக இருக்கக்கூடிய இத்தொகுதியில் உயர்ரக சேமிப்பு கிடங்குகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள் தேவை என்ற கோரிக்கைகள் தொடர்கின்றன. தென்னை விவசாயம் நிறைந்த இத்தொகுதியில் தேங்காய், கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
விவசாயிகளுக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,500-ம், கரும்பு டன் 1க்கு ரூ.5000-ம் என்ற கோரிக்கையும், திருமண்டங்குடி சக்கரை ஆலை விவசாயிகள் மீதான கடன் மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய கோரிக்கையும் பிரதானமாக விவசாயிகள் மத்தியில் எதிரொலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் பல்வேறு பிரச்சார யூகங்கள் பொதுமக்களிடம் கொண்டு சென்று சேர்க்கப்பட்டாலும் மக்களின் மனதில் அழிக்க முடியாத சின்னமாக சூரியன் குடிகொண்டதால் தகதகவென தஞ்சை மின்னுகிறது முரசொலி.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.