தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று துவங்கிய நிலையில் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் மட்டும் 34 பேர். ம.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 8 உறுப்பினர்களும், அ.தி.மு.க.,வை சேர்ந்த 7 உறுப்பினர்கள், பா.ஜ.க, அ.ம.மு.க.,வை சேர்ந்த தலா 1 உறுப்பினரும் உள்ளனர். மாநகராட்சி மேயராக தி.மு.க.,வை சேர்ந்த ராமநாதனும், துணை மேயராக அஞ்சுகம் பூபதியும் பதவியில் இருக்கின்றனர்.
மேயருக்கும் – தி.மு.க கவுன்சிலர்களுக்கும் நீண்ட காலமாகவே இணக்கமான சூழல் இல்லாத நிலை இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று காலை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பெரும் களேபரம் ஏற்பட்டது.
தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் தலைமையில் தொடங்கிய இன்றைய மாமன்ற கூட்டம் சட்ட விதிகள் படி கூட்டத்தை கூட்டவில்லை என ஆளுங்கட்சியான தி.மு.க கவுன்சிலர்கள், கூட்டத்தை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டதோடு வெளிநடப்பு செய்தனர். கைகலப்பு ஏற்படும் சூழலால் கூட்டத்தை விட்டு வெளியேறிய மேயர் மீது தண்ணீர் பாட்டிலை வீசி வாக்குவாதத்தில் அ.தி.மு.க கவுன்சிலர் ஈடுபட்டதால் தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம் பெரும் கலவரத்தில் பாதியிலேயே முடிந்தது.
க.சண்முகவடிவேல்