scorecardresearch

தஞ்சை மாநகராட்சி: 15 நாட்களில் பாலம் பழுது; அ.தி.மு.க-வினர் பேசும்போது மைக் ஆப் செய்த மேயர்

கட்டி முடிக்கப்பட்டு 15 நாட்களிலேயே அந்தப் பாலம் உருக்குலைந்தது குறித்து இன்றைய தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த விபரம் வருமாறு:

Thanjavur Corporation, new bridge collapse, DMK and AIADMK members clash, தஞ்சை மாநகராட்சி, 15 நாட்களில் பாலம் பழுது, அ.தி.மு.க-வினர் பேசும்போது மைக் ஆப் செய்த மேயர், Thanjavur Corporation new bridge collapse, DMK AIADMK members clash
தஞ்சை மாநகராட்சி

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள சிராஜ் நகரில் சிறிய பாலம் ஒன்று ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட 15 நாட்களுக்குள்ளேயே அந்த சிறிய பாலத்தில் மணல் லாரி ஒன்று சென்றபோது அந்தப் பாலம் பொத்துக்கொண்டு லாரி வானத்தை பார்த்தது. கட்டி முடிக்கப்பட்டு 15 நாட்களிலேயே அந்தப் பாலம் உருக்குலைந்தது குறித்து இன்றைய தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த விபரம் வருமாறு:

தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் க.சரவணக்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க உறுப்பினர் புண்ணியமூர்த்தி பேசுகையில், “இங்கு அ.தி.மு.க உறுப்பினர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் தற்போது எந்தந்த அணியில் உள்ளனர் எனத் தெரியவில்லை. யார் எதிர்க்கட்சித் தலைவர் என கடிதம் கொடுத்துள்ளார்களா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மேயர், “அடுத்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பான கடிதத்தை வழங்க வேண்டும் என்றார்.

பின்னர், அமமுக உறுப்பினர் கண்ணுக்கினியாள் பேசுகையில், “தஞ்சாவூர் கீழவாசலில் கட்டப்பட்ட பாலம் இடிந்தது தொடர்பாக ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மேயர் சண்.ராமநாதன், “கீழவாசல் பாலம் கட்டப்பட்டு 15 நாட்கள்தான் ஆகின்றன. பாலம் பணிகள் முடிவடையும் முன்பே அதில் லாரி சென்றதால் சேதமடைந்தது. இது தொடர்பாக ஒப்பந்தக்காரர், லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். லாரி ஓட்டுநர் விதிமுறையை மீறி இயக்கியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

அப்போது கண்ணுக்கினியாள் குறுக்கிட்டு, “பாலம் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டும் அனைத்து பணிகளையும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்த மேயர், “அ.தி.மு.க ஆட்சியில் மேரீஸ்கார்னர் பகுதியில் மரணப்பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலம் சேதமடைந்தது. நாங்கள் போராடிய பிறகுதான் பாலம் சீரமைக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு அ.தி.மு.க ஆட்சியே காரணம்” என்றார்.

அ.தி.மு.க உறுப்பினர் மணிகண்டன் பேசுகையில், “மேரீஸ்கார்னர் பாலம் கட்டும்போது ஏர் கிராக் ஏற்பட்டு உடனடியாக சரி செய்யப்பட்டு தற்போது போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. ஆனால் நீங்கள் கீழவாசலில் கட்டிய பாலம் 15 நாட்களில் இடிந்தது. இடிந்த பாலத்தை ஏன் இரவோடு இரவாக அகற்றினார்கள்” என்றார். அப்போது தி.மு.க உறுப்பினர்கள் மேரீஸ் கார்னர் பாலத்தில் முறைகேடு ஏற்பட்டதாக கூச்சலிட்டு, தாங்கள் ஏற்கெனவே தயாராக கொண்டு வந்த மேரீஸ் கார்னர் பாலத்தின் பணிகள் தொடர்பான புகைப்படங்களை அட்டையில் ஒட்டி எடுத்து வந்து மாமன்ற அரங்கில் காட்டினர்.

பின்னர், கூட்டத்தில் மணிகண்டன் மற்றும் கண்ணுக்கினியாள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர்களது மைக் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மைக் நிறுத்தப்பட்டதால் அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கூட்ட அரங்கத்துக்குள் ஒன்றாக வந்து கூச்சலிட்டனர். அப்போது தி.மு.க உறுப்பினர்களுக்கும், அ.தி.மு.க, அமமுக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மேயர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தை முடித்துவிட்டு வெளியேறினார்.

பின்னர், அ.தி.மு.க, அமமுக, பாஜக உறுப்பினர்கள் அனைவரும் கூட்ட அரங்கிலேயே தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கையில்; “தஞ்சாவூர் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பெண் உறுப்பினர்கள் பலர் இந்த அவையில் இருக்கும்போது, அநாகரிகமாக பேசுவது, மின் விளக்குகளை நிறுத்தி பாதுகாப்பில்லாமல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் பெரும் குளறுபடிகள் உள்ளதால், அந்த பணிகளின் தரத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். இனிமேல் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது குறைகளை எடுத்துக் கூறும்போது, மைக்குகளை ஆப் செய்யக்கூடாது என வலியுறுத்தினர்.

சுமார் 30 நிமிடங்கள் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை ஆணையர் க.சரவணக்குமார் அரங்கத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அரங்கை விட்டு வெளியே அழைத்துச் சென்றார். ஒன்றிணைந்த அ.தி.மு.கவினர், தஞ்சாவூர் மாநகராட்சியில் பிரச்சினை என்றதும் அ.தி.மு.கவில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கே.பழனிசாமி அணியினர், அமமுகவினர் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அமமுக மாநில பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ரெங்கசாமி, மாநகர செயலாளர் ராஜேஷ்வரன், அ.தி.மு.கவின் கே.பழனிச்சாமி அணியைச் சேர்ந்த காந்தி, துரை.திருஞானம், கு.ராஜமாணிக்கம், சரவணன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Thanjavur corporation new bridge collapse dmk and aiadmk members clash