க.சண்முகவடிவேல்
Murasoli | Dmk | Thanjavur: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் தி.மு.க வேட்பாளராக தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் முரசொலி அறிவிக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் இவர் பெயரை அறிவித்தபோது, `தஞ்சாவூரில் முரசொலியே நிற்பதாக’ தெரிவித்தார். இதன் மூலம் தி.மு.க வட்டாரத்தில் தஞ்சை தொகுதி கவனம் ஈர்த்துள்ளது.
யார் இந்த முரசொலி?
இந்நிலையில், யார் இந்த முரசொலி, வேட்பாளர் ரேஸில் எப்படி முந்தினார், இவருடைய பின்புலம் என்ன என்பது குறித்து இங்கு சுருக்கமாக பார்க்கலாம்.
ஏற்கனவே 9 முறை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு, 6 முறை எம்.பியாக தஞ்சையில் கர்ஜித்துக்கொண்டிருந்த சிட்டிங் எம்.பியும், தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பழநி மாணிக்கத்தை வேட்பாளர் ரேஸில் வீழ்த்தி வேட்பாளராக இடம் பிடித்துள்ளார் முரசொலி.
முரசொலி குறித்து தஞ்சை தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். `தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கு பழநிமாணிக்கம், முரசொலி, ராதிகா மணிமாறன், அஞ்சுகம் பூபதி, கலைவாணி மோகன் உள்ளிட்ட 24 பேர் விருப்பமனு தாக்கல் செய்திருந்தனர். இருப்பினும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது நேர்காணலில், முரசொலி மற்றும் ராதிகா மணிமாறனிடம் மட்டும் தேர்தலுக்கு எவ்வளவு செலவு செய்ய முடியும், உங்களது பின்னணி என்ன என்ற விவரங்களை கேட்டுள்ளார்.
இதே நேர்காணலில் கலந்துக்கொண்ட சிட்டிங் எம்.பி., பழநி மாணிக்கத்திடம் மு.க.ஸ்டாலின் எதுவும் கேட்கவில்லை. அப்போதே தமக்கு வாய்ப்பு நழுவுகின்றது என அறிந்த பழநிமாணிக்கம் கட்சியிம் மூத்தவர்களை தொடர்புகொண்டதோடு நேராகவும் சென்று விபரம் கேட்டறிந்தபோது தமக்கு வாய்ப்பு நழுவுகிறது என்பது உறுதி செய்திருக்கின்றார்.
அதேநேரம், தி.மு.க தலைவர் தன்னிடம் உற்சாகமாக பேசிய வார்த்தைகளை தனக்கு பக்க பலமாக எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்யத் துவங்கிய முரசொலி, தஞ்சை தொகுதிக்குட்பட்ட சில எம்.எல்.ஏ-க்களை சந்தித்த தனக்கு சீட் கிடைத்தால், தான் வெற்றி பெறுவதற்கு அவர்களின் முழு ஆதரவும் ஆசியும் வேண்டும் எனக் கேட்டு ஆசி பெற்றுள்ளார். அப்போது முதலே தஞ்சையில் முரசொலி தான் என தி.மு.க-வினர் உறுதிபடுத்திக்கொண்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/55c8a256-768.jpg)
இதைத்தொடர்ந்து பழநிமாணிக்கத்தை அழைத்த தி.மு.க தலைமை, இந்த முறை உங்களுக்கு சீட் இல்லை, கட்சி அறிவிக்கும் நபரை வெற்றி பெற செய்யுங்கள் என அறிவுறுத்தியிருக்கிறது. அப்போது இந்த ஒரு முறை மட்டும் என ஆரம்பித்த பழநிமாணிக்கம் முடிப்பதற்குள்ளேயே புதிய முகத்திற்குத்தான் தஞ்சையில் வாய்ப்பு என தலைவர் கூறிவிட்டார் என கராராக பேசி தேர்தல் வேலையை சுனக்கமின்றி செய்யுங்கள் என்றனறாம்.
விவசாயத்தை பின்னணியாக கொண்ட குடும்பத்திலிருந்து தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தை தவிர்த்து தொகுதிக்குள் பெரிதாக அறிமுகம் இல்லாத முரசொலி வேட்பாளராக இடம் பிடிப்பதற்கு அவருடைய அமைதியான சுபாவம் தான் காரணம் என்கிறார்கள் தி.மு.க-வினர்.
மத்திய மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரனின் நெருங்கிய ஆதரவாளருமாக இருப்பவர் முரசொலி. திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தென்னங்குடி கிராமத்தை சேர்ந்த இவர், பாரம்பரியமான தி.மு.க குடும்பத்தை சார்ந்தவர். வடக்கு ஒன்றிய செயலாளருக்கான உள்கட்சி தேர்தலில் பழநிமாணிக்கம் தரப்பை எதிர்த்து முரசொலியை ஒன்றிய செயலாளர் ஆக்கினார் சந்திரசேகரன்.
/indian-express-tamil/media/post_attachments/093999d7-298.jpg)
அன்பில் மகேஸ், மேயர் சண்.ராமநாதன் ஆகியோரின் சிபாரிசும் கிடைக்க வேட்பாளர் ரேஸில் முந்தினார் முரசொலி. குறிப்பாக மேயர் ராமநாதன், முரசொலிக்காக தனிப்பட்ட முறையில் உதயநிதியிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. டி.ஆர்.பாலுவின் ஆதரவும் இருந்தது இவருக்கான ப்ளஸ் ஆக இருந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்தே சத்தமில்லாமல் முரசொலி முயற்சி செய்ததன் பலனாக தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளராக இப்போ முரசொலி அறிவிக்கப்பட்டிருக்கின்றார் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.
ஒன்றிய செயலாளராக பொறுப்பேற்ற பிறகு இரண்டு இடங்களில் 50 அடி உயர கொடி கம்பத்தில் தி.மு.க கொடி ஏற்றும் நிகழ்வை விமர்சையாக நடத்தினார். அப்போது உதயநிதி ஸ்டாலின் முரசொலியை வெகுவாக பாராட்டினார். கட்சியில் தலைமையுடன் நெருக்கமாக இருப்பவர்கள் சிலர், வேட்பாளர் ரேஸில் சிலருக்கு சிபாரிசு செய்திருந்தனர். ஆனாலும் எளிமையாவர், அமைதியான சுபாவம் கொண்டவர் என அறியப்பட்ட முரசொலி சத்தமில்லாமல் சாதித்திருக்கிறார்.
வேட்பாளராக அறிவிக்கபட்ட பின்னர் முரசொலி அவரின் நண்பரான ராமநாதனுக்கு முத்தம் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். துரை.சந்திரசேகரன் ஆதரவாளரான முரசொலிக்கு சீட் கிடைத்திருப்பதன் மூலம் சந்திரசேகரனின் கை ஓங்கியிருக்கிறது. தி.மு.க-வில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் தொகுதி தி.மு.க-விற்கு சாதகமாக இருக்கிறது என்கிறார்கள். சாதரண பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்பதை நிரூபிக்கும் விதமாக புதியவரான முரசொலிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது என்றாலும், தி.மு.க-வின் முன்னணி, மூத்த நிர்வாகிகளுக்கு சீட் கை நழுவியதால் திமுகவில் உள்ளடி வேலைகளுக்கும் பஞ்சமில்லை என்கின்றனர் தஞ்சை நிர்வாகிகள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“