தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை சட்டவிரோதமாக மனைப் பிரிவுகளாக மாற்றியதாகவும் அதில் ஒரு மனையை மேயர் தனது மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்திருப்பதாகவும் சர்ச்சை எழுந்த நிலையில், இந்த விவகாரம் தற்போதுகோர்ட்டுக்கு வந்திருக்கிறது.
தஞ்சாவூரில் கடந்த 1973-ல் அருளானந்தம்மாள் நகர் உருவாக்கப்பட்டது. இந்த மனைப்பிரிவு உருவான போது நகராட்சி (அப்போது நகராட்சி) பொதுப் பயன்பாட்டுக்காக சுமார் 45 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது. கந்தர்வகோட்டையைச் சேர்ந்த பொன்னாமணி என்பவர் அந்த இடம் தனக்குச் சொந்தம் எனக் கூறி அதனை மனைப்பிரிவுகளாகப் பிரித்து விற்க முயன்றார். அப்போது நகராட்சி ஆவணங்களில் அது நகராட்சி இடம் என இருந்ததால் மனைப்பிரிவுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, பொன்னாமணி பழைய கிரைய பத்திரத்தை வைத்து சிலரின் துணையோடு அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றியுள்ளார். இதைவைத்து கடந்த ஆண்டு இந்த மனைப்பிரிவுக்கு மாநகராட்சி அனுமதி கொடுத்திருக்கிறது. இதுவரை எந்தச் சர்ச்சையும் இல்லாத நிலையில், இந்த மனைப் பிரிவில் சுமார் 2,000 சதுரடி மனையை திமுக மேயர் சண்.ராமநாதன் தனது மனைவி சங்கீதா பெயரில் வாங்கியுள்ளார். இதற்குப் பிறகுதான் சந்தேகங்கள் எழ தொடங்கியுள்ளது.
மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தனியார் கைக்கு போனது எப்படி? அதில் ஒரு பகுதி மேயரின் மனைவி பெயருக்கு பத்திரப் பதிவானது எப்படி? என்றெல்லாம் கேள்விகள் கிளம்பின. மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க உறுப்பினர்களே இதுகுறித்து கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையரோ, “நான் இந்த ஊருக்குப் புதுசு, ஆவணங்களைப் பார்த்துவிட்டுக் கூறுகிறேன்” என்று முதலில் கூறியுள்ளார். அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, “இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் மாமன்றத்தில் விவாதிக்கக்கூடாது” என விலகிக்கொண்டார்.
திமுக உறுப்பினர்கள் இந்தப் பிரச்சினையை கட்சி தலைமை வரைக்கும் கொண்டு சென்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அருளானந்தம்மாள் நகரில் வசிக்கும் பரந்தாமன் என்பவர் தான் இதுகுறித்து உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,“இந்த நகர் உருவாக்கப்பட்ட போது நகராட்சிக்கு தானமாக இந்த இடம் வழங்கப்பட்டு, நகராட்சி பள்ளிக்காக பதிவு செய்யப்பட்டது. ஆனால், சிலர் இதில் முறைகேடாக மனைப்பிரிவு ஏற்படுத்தி விற்பனை செய்துள்ளனர். அதற்காக நகராட்சி ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டது எப்படி என்று தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
மேயர் சண்.ராமநாதனோ, “இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், பேசுவதும், கருத்துக் கூறுவதும் சரியாக இருக்காது. இருந்தாலும் அநீதி வீழும், நீதி வெல்லும். எங்களுக்கு நியாயம் கிடைக்கும்” என்று கூறியுள்ளார், இந்த வழக்கில், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் மனைவி சங்கீதா, மாவட்ட வருவாய் அலுவலர், பொன்னாமணி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரபால் தஞ்சை திமுகவில் சலசலப்பு அதிகரித்துள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“