தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு பகுதியில் கடந்த 12-ம் தேதி, 23 வயது நிரம்பிய பட்டதாரி இளம் பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது குறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கவிதாசன், பிரவீன், திவாகர் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
முன்னதாக 12-ம் தேதி இரவே பாதிக்கப்பட்ட இளம்பெண், தன்னை சீரழித்தவர்கள் மீது புகார் கொடுக்க பாப்பாநாடு காவல் நிலையத்திற்கு சென்றிருக்கின்றார்.
அப்போது அங்கே பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளர் சூர்யா புகாரை வாங்க மறுத்து, ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு திருப்பி அனுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த இளம்பெண் ஒரத்தநாடு மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்திருக்கின்றார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் மருத்துவ சிகிச்சைக்கோரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கின்றார். அங்கே பணியில் இருந்த மருத்துவர்களும், செவிலியர்களும் இளம்பெண்ணை தரக்குறைவாக நடத்தியதோடு சிகிச்சையளிக்க மறுத்திருக்கின்றனர்.
பின்னர், ஒரத்தநாடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமது வாகனத்திலேயே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சைக்கு அனுமதித்திருக்கின்றார்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி என்.அழகேசன் விசாரணை நடத்தினார். அதன் அடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தவறிய மருத்துவமனையில் அன்றைய தினம் பணியில் இருந்த டாக்டர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அந்தப் பெண்ணுக்கு ஏன் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் வரும் 27-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், பாப்பாநாடு காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சூர்யாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி.,ஜியாவுல்ஹக் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அவர்மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள ஒரத்தநாடு, பாப்பாநாடு பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து மூலம் தீர்வுகள் இன்றும் அரங்கேறி வருவதாகவும், இவர்கள் காவல் நிலைய அதிகாரிகளை கவனிப்பதன் மூலம் இதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாகவும் அப்பகுதியினர் போலீஸார் மீது குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.