Advertisment

'மணல் திருட்டுக்கே திருவையாறு புறவழிச்சாலை': விவசாயிகள் போராட்டக் களத்தில் கொந்தளித்த சீமான்

மக்கள் பயன்பாட்டிற்கான சாலை என்று ஆட்சியாளர்களோ, சாலை பணியை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ மனச்சான்றோடு சொல்வார்களா? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Thanjavur: Kandiyur farmer protest, Seeman speech

Naam Tamilar Katchi (NTK) chief coordinator Seeman speaks at farmer protest Kandiyur near Thiruvaiyaru Tamil News

க.சண்முகவடிவேல்

Advertisment

தஞ்சை மாவட்டம் திருவையாறில் ரூ.191 கோடியில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக கண்டியூர், திருவையாறு, பெரும்புலியூர், கல்யாணபுரம் உள்ளிட்ட 6 கிராமங்களின் வழியே சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. விளைநிலங்களில் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியூரில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக தஞ்சாவூர் ஆர்.டி.ஓ தலைமையில் விவசாயிகளிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து பயிர் அறுவடை செய்யும் வரை சாலை அமைக்கும் பணி நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் விவசாயிகளிடம் தெரிவித்தனர். ``முப்போகம் விளையக்கூடிய நிலத்தை எங்க உயிரே போனாலும் சாலை அமைக்க தரமாட்டோம்" எனக் கூறி விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாலை அமைக்கும் இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``இந்த அரசு பயிர்களை கொல்வதாக நினைக்கிறது. ஆனால், பல கோடி உயிர்களை படுகொலை செய்திருக்கிறது. இதை நான் சர்வாதிகாரம் என்று சொல்லமாட்டேன். கொடுங்கோன்மை என்றே சொல்வேன். ஹிட்லரை சர்வாதிகாரி எனச் சொல்வதற்கு அருகதையற்ற நீங்கள் பல கோடிக்கான உயிர்களை கொலை செய்திருக்கிறீர்கள்.

publive-image

பயிர் இல்லைன்னா உயிர் இல்லை, பயிர் இல்லைன்னா வயிறு இல்லை. உயிர் இல்லை என்றால் பயிர் இல்லை. அப்ப இது உயிர் கொலைதான். வேளாண் குடிமக்களைப் பொறுத்தவரை பயிர் என்பது பாதுகாத்து போற்றி வணங்குகின்ற உயிர். பயிரிட்டு 50 நாள்களான சம்பா பயிர்களை நெற்கதிர் விடக்கூடிய நேரத்தில் கர்ப்பிணியை உயிருடன் புதைப்பது போல, பச்சிளம் குழந்தைகளை உயிருடன் குழிக்குள் போட்டு மூடினால் எப்படியிருக்கும். அது போன்ற ஒரு செயலை இரும்பு கை கொண்டு, பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை அள்ளிப்போட்டு மூடியுள்ளனர்.

தஞ்சாவூர் நல்லா விளைஞ்சா தமிழ்நாடு முழுக்க சோறு கிடைக்கும். தமிழ்நாடு நல்லா விளைஞ்சா உலகத்துக்கே சோறு போடலாம் என்பது நம் முதுமொழி. இது முன்னோர்கள் உணர்ந்து சொன்னது. அந்த தஞ்சையில் விவசாய நிலத்தை எடுத்து சாலை அமைப்பதற்கு என்ன அவசியம் இருக்கு. காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் மணல் எடுத்துச் செல்வதே சாலை அமைப்பதற்கு முதன்மையான காரணம்.

முதன்மை சாலையில் லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லும்போது விபத்துகள் ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் மனதில் எரிச்சல் ஏற்பட்டு போராட்ட குணத்துக்குத் தயாரான நிலையில், புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை மணலை திருடி கொண்டு செல்வதற்கு அவசியப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்கான சாலை என்று ஆட்சியாளர்களோ, சாலை பணியை தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ மனச்சான்றோடு சொல்வார்களா.

மக்களின் பயன்பாட்டிற்கு, தேவைக்காக இந்த சாலை போடப்படவில்லை, மணல் திருட்டிற்காகவே போடப்பட்டது. இதை எப்படி சகித்து கொள்ள முடியும். இதையே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் செய்து நீங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால் என்னபாடு படுத்தியிருப்பீர்கள். அரசியல் வலிமை, அதிகார வலிமையற்ற மக்களை என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்ற திமிரில் இதை செய்துள்ளனர். விளை நிலத்தை அழித்துவிட்டு சாலை போட முடியும். ஆனால் மீண்டும் சாலையை அழிச்சிட்டு விளை நிலமாக மாற்ற முடியுமா. இது கொலைக்கார செயல், கொடும்பாதக செயல், பல கோடிக்கணக்கான உயிர்களை கொன்ற கொலைக்காரர்கள் இவர்கள், ராஜபக்‌ஷேவைவிட படுகொலையாளர்கள், மீண்டும் சாலை அமைக்க வந்தால் நான் வந்து நின்னு தடுப்பேன்." என்று சீமான் கூறினார்.

Tamilnadu Thanjavur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment